குமார், சசி, சாந்தி அக்கா மற்றும் பிரகாஷ்
என்ன ஏதோ சினிமாப்பட
தலைப்பு மாதிரி இருக்குன்னு நினைக்குறீங்களா? இல்லை. நாம கவனிக்கத் தவறிய சில
விஷயங்கள் நம்ம வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கும்கிறத இதைப் படிச்சதுக்கு அப்புறம்
நீங்க புரிஞ்சுக்குவீங்க. என் மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சு போன, ஒரு அழிக்க முடியாத
காயத்தை ஏற்படுத்தின சில விஷயங்களை உங்க கிட்ட சொல்லப் போறேன்.. மனசிருந்தா
கொஞ்சம் feel பண்ணுங்க!
குமார், சசி, சாந்தி அக்கா மற்றும் பிரகாஷ் இவங்க நாலு
பெரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வெண்ணந்தூர் ல முறையே 1999,96,96,97 ல பாஸ்
ஆனவங்க. பாஸ் ஆனவங்க மட்டுமில்ல, குறிப்பிட்ட அந்த வருடங்களில் பள்ளியிலேயே
முதலிடம் பிடித்தவர்கள்.இதுல பிரகாஷ் பத்தி உங்க எல்லாருக்கும் தெரியும். அது
நானேதான்! நாம பேசப்போறது குமார், சசி மற்றும் சாந்தி அக்கா. சசியும் சாந்தி
அக்காவும் எனக்கு ஒரு வருசம் சீனியர்ஸ். குமார் என்ன விட ரெண்டு வருஷம் சின்ன
பையன். என் தம்பியும் அவனும் ஒரே கிளாஸ்ல படிச்சாங்க.
குமார் ஒரு serious talent. எப்போவுமே முதல் மதிப்பெண் தான்
வாங்குவான். என் தம்பியும் அவன விட நல்ல படிக்கணும்னு எவ்வளோவோ ட்ரை பண்ணான். அவனால முடியல. ஏன்? யாராலையும்
முடியல. அவனுக்கு பாடம் நடத்துன ஆசிரியர்களே அதிசயிக்கும் அளவுக்கு பிரமாதமான
அறிவு. எங்க பள்ளி நாடகத்துல ராஜா வேஷத்துல நடிச்சு பக்கம் பக்கமான டயலாக் எல்லாம்
சர்வ சாதாரணமா பேசிட்டு போனான். குட்டியா, அழகா பேசுற, நல்லா படிக்குற குமார் எங்க
குடும்பத்துல எல்லோருக்கும் pet ஆயிட்டான்.அஞ்சாங்கிளாஸ் ல எல்லாரும் எதிர்
பார்த்த படி அவன் தான் முதல் மதிப்பெண்ணும் வாங்குனான். ஆனா அதிலிருந்து
இதுவரைக்கும் அவன் வாழ்க்கையில எதுவுமே சரியா நடக்கல.
அஞ்சாங்கிளாஸ் முடிச்ச உடனே அவன அவங்க அப்பா வேலைக்கு
அனுப்பிச்சுட்டாரு. (அவங்க அப்பா இளநீர் வியாபாரம் தான் செஞ்சுட்டு இருந்தாரு.
அவங்க அம்மா கட்டட சிட்டாள் வேலைக்கு போய்க்கிட்டு இருந்தாங்க. மேலும் அவங்க அப்பா
ரொம்ப குடிப்பாரு) ஒரு படிக்கிற பையன் படிப்பு வீணாப் போயுரும்னு நாங்கலாம்
எவ்வளோவோ சொல்லிப் பார்த்தோம். ஆனா கேட்கல. எங்க பள்ளி ஆசிரியர்களே அவங்க
வீட்டுக்குப் போயி எடுத்து சொன்னாங்க. ஆனா என்னால படிக்க வைக்க முடியாது. வேணும்னா
நீங்களே கூட்டிட்டு போயி சாப்பாடு போட்டு படிக்க வச்சுக்கோங்க ன்னு திட்டிட்டாரு
எல்லோரையும். அங்கேயே முழுக்கு விழுந்து போச்சு அவன் படிப்புக்கு.
அப்புறம் சில
வருஷம் குமார் என்ன ஆனான்னே தெரியல..
கொஞ்ச நாள் முன்னாடி ஊர்த்திருவிழா சமயத்துல வீட்டுக்கு
வந்திருந்தான் குமார்.கொஞ்சம் தாடி. கலைந்த முடி. ஒரு பழைய லுங்கி. லைட்டா சரக்கு
சாப்பிட்டிருந்தான்’.
“பிரகாஷ்! ரொம்ப கலர் ஆயிட்டே.. AC ல தான் வேலையோ” இதுதான்
அவன் கேட்ட முதல் கேள்வி. நான் லேசா சிரிச்சேன்.
அப்புறம் அவன் வேலைக்கு போனது,
கஷ்டப்ப்ட்டது, மூட்டை தூக்குனது’ எல்லாம் சொல்லி கடைசியா இப்போ ஓமலூர்ல ஒரு
இரும்பு பட்டறை வெச்சுருக்குறது வரைக்கும் எல்லாம் சொன்னான்.
திடீர்னு என் தம்பியையும் பார்த்து, “ரொம்ப சந்தோசமா
இருக்குடா. என் கூட படிச்சவன் இன்னைக்கு 25000 ரூபாய் சம்பளம் வாங்கும்போது ரொம்ப
பெருமையா இருக்கு. என்னைய விட கம்மியாத்தான் படிச்ச.. இன்னைக்கு இவ்வளவு
நல்லா இரு.க்.க. என் வாழ்க்கைதான் இப்படி ஆயுடுச்... சு”ன்னு சொல்லி அழ
ஆரம்பிச்சுட்டான்.
ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே எங்களுக்கு புரியல. அப்புறம்
அம்மாதான் அவன் தலைய கோதி விட்டு “கவலைப்படாதே குமாரு! நல்ல உழைப்பு மட்டும்
இருந்தா வாழ்க்கையில நிச்சயம் முன்னுக்கு வரலாம். தப்பான எந்த வழிக்கும் போயிடாதே”
ன்னு ஆறுதல் சொல்லி சாப்பாடு போட்டு அனுப்பி வெச்சாங்க.அவன் அழுகை இன்னும்
கண்ணுலேயே நிக்குது.
சாந்தி அக்கா! எங்க பக்கத்துக்கு வீட்ல இருந்தாங்க.பேருக்கு
தகுந்த மாதிரி சாந்த சொருபினி. மாநிறம் தான்! ஆனா அப்பேர்ப்பட்ட அழகு. இவங்க
அஞ்சாம் கிளாஸ் முடிஞ்சு பத்தாம் கிளாஸ் வரைக்கும் படிச்சாங்க.. எனக்கு தெரிஞ்சு
அவங்க எக்ஸாம் பேப்பர் தான் எங்க எல்லாருக்கும் மாடல். அவ்வளவு நல்லா எழுதுவாங்க.
தொடக்கப்பள்ளி முடிஞ்சு எங்க ஊர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிச்சாங்க. அது ஒரு
மோசமான ஸ்கூல். அதுவுமில்லாம குடும்ப சூழ்நிலை காரணமாக தினமும் வீட்டு வேலை
எல்லாம் செஞ்சிட்டு அப்புறமாதான் ஸ்கூல் போவாங்க. ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு
வந்து தறி ஓட்டுவாங்க.
இத்தனைக்கும் நடுவுலையும் படிப்புல ரொம்ப கவனமா இருந்தாங்க.
எப்பவுமே நல்ல மதிப்பெண்கள்தான். பத்தாம் கிளாஸ்ல கூட 400 க்கு மேல எடுத்தாங்க.
அந்த ஸ்கூல்ல 400 மார்க்னா ரொம்ப பெரிய விஷயம். இது 2001 ல.
ஆனா வசதியின்மை காரணமா
அதுக்கு மேல அவங்களை படிக்க வெக்கல. அதுக்கு அப்புறம் நாங்களும் புது வீடு
மாறிட்டோம். நானும் +2 முடிச்சு இன்ஜினியரிங் போயிட்டதால அவங்களுக்கு என்ன
ஆச்சுன்னு தெரில. ஆனா ஒரு சமயம் அவங்களுக்கு கல்யாணம்னு பத்திரிகை வந்தது மட்டும்
ஞாபகம் இருக்குது.
அதே திருவிழா சமயம்.. அத்தை வீட்டுக்கு போலாம்னு
போய்க்கிட்டு இருந்தேன். எதிர்ல சாந்தி அக்கா! பச்சை கலர் ல ஒரு சேலை கட்டி
இருந்தாங்க. நெற்றி நிறைய குங்குமம்.கூடவே ஒரு நான்கு வயது பெண் குழந்தை. வயிறு
வேறு பூசியிருந்தது. என்னைப் பார்த்ததும் அவங்களுக்கு முகமெல்லாம் சிரிப்பு.
“பிரகாஷு! எப்புடி இருக்கே?!!”
“நல்லா இருக்கேன்! நீங்க? என்ன இந்தப் பக்கம்”
“ம்.. திருவிழா இல்ல அதான் கோயிலுக்கு வந்தேன்! வாயேன்!
வீடு பக்கத்துல தான் இருக்குது, சாப்பிட்டு போ”
“இல்லைக்கா! கொஞ்சம் வேலை இருக்கு இன்னொரு நாளைக்கு வரேன்”
“ம்.. சரிடா... கண்டிப்பா வரணும்.. பெரிய ஆளா வளர்ந்துட்டே!
நான் வரேன்! பாப்பா! மாமாவுக்கு டாட்டா சொல்லு” என்று சொல்லி விட்டு மெதுவாக
நடந்து போனாங்க.
பி.கு. 1: சாந்தி அக்காவுக்கு ரெண்டாவது ஆண்
குழந்தை.இப்போது அவங்களோட முழு நேர வேலையே குழந்தை வளர்ப்புதான்!
சசி, எனக்கு ஒரு வருஷம் சீனியர். வாடா போடான்னு தான்
பேசிக்குவோம்.எக்ஸாம்க்கு என்னென்ன படிக்கணும், ஸ்காலர்ஷிப் எப்படி வாங்குறது,
talent test னா என்ன? இப்படி பல விஷயங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கான். +2 வரைக்கும் அவன்தான் எப்பவுமே ஸ்கூல்
பர்ஸ்ட். +2 ல 1097மார்க் வாங்குனான். அப்புறம் இன்ஜினியரிங் படிக்க வசதி
இல்லாததுனால டீச்சர் ட்ரைனிங் ஜாயின் பன்னுனான்.
கொஞ்ச நாள் முன்னாடி நானும் அம்மாவும் பக்கத்துக்கு ஊர்ல
ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு திரும்பி வந்துகிட்டு இருந்தோம். பக்கத்துக்கு சீட்ல
சசி! ரொம்ப சிம்பிளா ஒரு சட்டை, பேன்ட், ஒரு பேரகான் செருப்பு போட்டிருந்தான்.
“சசி! நல்ல இருக்கியா? என்ன பண்ற?”
“நல்ல இருக்கேண்டா. இங்கதான் வித்யா மந்திர் ஸ்கூல்ல
டீச்சர் ஆ இருக்கேன்”
மற்றும் சில பரஸ்பர விசாரிப்புகளோடு முடிந்து போனது அந்த
சந்திப்பு. என்னவோ, என் வேலை குறித்து சசி ஒரு கேள்வியும் கேட்கல.
பி.கு.2: அந்த ஸ்கூல் ல டீச்சர்ஸ்க்கு எவ்வளவு சம்பளம்
கொடுப்பாங்கன்னு தெரிஞ்சா உங்களுக்கு கண்ணீரே வரும்!
இந்த சம்பவங்களால மனசு ரொம்ப பாதிச்சுடுச்சு. இந்த மாதிரி
சமயங்களில் அம்மா கிட்ட தான் புலம்புவது வழக்கம். இப்பவும் அப்படித்தான்.
“அம்மா! ஏன்மா இப்படி. அவங்க என்ன பாவம் பண்ணாங்க!
அவங்களுக்கு மட்டும் ஏன் வாழ்க்கை இப்படி இருக்கு?”
என் கஷ்டமான கேள்விகளுக்கு எல்லாம் ரொம்ப சிம்பிளா ஒரு
பதில் தருவதையே வழக்கமாக வைத்திருக்கிறாள் அம்மா!
“எல்லாத்துக்கும் பெத்தவங்க தான் காரணம். தன் பிள்ளைகளோட
எதிர்காலத்துக்காக நாம கொஞ்சம் கஷ்டப்படுவோம்னு நினைக்குற எல்லா பெத்தவங்களோட
பிள்ளைகளும் நல்லா இருப்பாங்க” ன்னாங்க.எனக்கும் ரொம்ப நியாயமாகப் பட்டது.
நம்மை விட யாரவது ரொம்ப நல்லா வாழ்ந்தா நமக்கு பொறாமையா இருக்கு. அதே சமயத்துல நம்மைவிடதிறமையில் சற்றும் குறைச்சல் இல்லாத, அல்லது நம்மை
விட கூடுதல் திறமை படைத்தவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்படும்போது ரொம்ப கஷ்டமா
இருக்கு. கொஞ்சம் அழலாம் போலத்தோணுது.....
.
.
so, இந்த மாதிரி திறமை உள்ள யாரவது சரியான வழிகாட்டுதல்
இல்லாம தப்பான வழியைத் தேர்ந்தெடுத்தா முடிஞ்சா உதவி பண்ணுங்க. இல்ல. atleat ஒரு வழிகாட்டியாகவாவது இருங்கள். நானும் அது
போல் ஆக முயற்சி செய்யறேன்!