பொதுவாக ஒரு காதல் கடிதம் எழுதுவதுஅவ்வளவு எளிதன்று…
அது,
கடவுளுக்கு செய்யும்
அர்ச்சனையாகவும் இருக்க வேண்டும்.
வியாபாரி செய்யும்
விற்பனையாகவும் இருக்க வேண்டும்.
.
ஒரே சமயத்தில் அது
நேர்த்தியாக தொடுக்கப்பட்ட
மாலையாகவும் இருக்க வேண்டும்,
சாணையிடப்பட்ட கத்தியாகவும் இருக்க வேண்டும்.
.
மேலாக,
குழந்தையின் குரலில் வெளிப்பட்ட
யோகியின் வார்த்தையாகவும்
யோகி பேசும்
மழலை மொழியாகவும் இருக்க வேண்டும்
.
காதல் கடிதம் எழுதும் சில நிமிடங்கள்,
தவத்தின் போதான ஒரு மோன நிலை
காமத்திற்கு
பின்பான மௌன நிலை
ஒரு காதல்
கடிதம்எளிதில் பூர்த்தியடைவதில்ல.
.
அது
ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சியாய்
ஒரு பள்ளிக் குழந்தையின் கேள்வியாய்,
ஒரு பக்தனின் இறைத்தேடலாய்
ஒரு வீரனின் வெற்றித் தேடலாய்,
திருப்தியின்றி
தொடர்கிறது...
.
காதல் கடிதம்,
ஒரு தீர்க்க தரிசனத்தோடு எழுதப்படுகிறது
ஒரு தீட்சை பெறுவதற்காக எழுதப்படுகிறது.
பண்பாட்டின் நெறியோடு எழுதப்படுகிறது.
பிள்ளை பெறும் வலியோடு எழுதப்படுகிறது.
.
காதல் கடிதத்தின் முடிவென்பது
ஒரு குற்றவாளிக்கு கிடைக்கும் தண்டனையாகவோ,
ஒரு நோயாளிக்கு கிடைக்கும் மருந்தாகவோ,
ஒரு யாசகனுக்கு கிடைக்கும் பிச்சையாகவோ,
ஒரு பாவிக்கு கிடைக்கும் பாவமன்னிப்பாகவோ
இருந்துவிடலாம்.
.
ஆயினும்
ஒரு காதல் கடிதம்
மன்னிக்கப்பட்ட எழுதுப்பிழைகளுடன்
மெல்லத்துடிக்கும் இதயம் பதித்து
உடலிலிருந்து உயிர் பிரித்து ஊற்றி
ஒரு கலைப்படைப்பின் நேர்த்தியோடு
எழுதப்படுகிறது.
அதாவது..
ஒரு காதல் கடிதம் எழுதுவது,
அவ்வளவு எளிதன்று..