Archive for 2012

ஒரு பொன் மாலைப் பொழுது...

Aug
2012
08

on

No comments


“கவிதா! எனக்கு கல்யாணம் நிச்சயமாயுடுச்சு”
.
“ஹேய்! congratulations!  என்ன பிரகாஷ்? சந்தோசமா சொல்ல வேண்டிய விஷயத்தை இவ்வளவு சோகமா சொல்றே?!”
.
“மத்தவங்க கிட்ட சொல்லியிருந்தா சந்தோசமா சொல்லி இருப்பேன்! உங்கிட்ட சொல்லும்போது, பொய்யா ஒரு சந்தோசத்தை முகத்தில வரவழைக்க முடியல”
.
“ம்.. நீ இன்னும் பழசை மறக்கலைன்னு நினைக்குறேன்”
.
“அதெப்படி கவிதா, அவ்வளவு சுலபமா மறக்க முடியும்? உன்னால முடியுமா முதல்ல?”
.
“மறக்க முடியும், முடியாதுன்கிறதெல்லாம் அப்புறம் பிரகாஷ். என் மனசுல எந்த சஞ்சலமும் இல்ல. அதுக்கும் மேல, பழசை எல்லாம் நெனைச்சு உன்னை மாதிரி ஒரு நல்ல நண்பனை என்னால இழக்க முடியாது.”
.
“நட்பு? ம்ஹும். தயவு செஞ்சு அந்த வார்த்தையை திரும்ப சொல்லாதே கவிதா! காதலிச்ச பொண்ணை தோழின்னு சொல்ற அற்பமான புத்தி எனக்கு இல்ல”
.
“ஆனா நான் உன்னை எப்பவுமே அப்படி நெனைச்சதே இல்லையே!”
.
“நீ பொய் சொல்றே”
.
“அப்படின்னு நீ நெனைச்சுகிட்டா அது என்னோட தப்பு கெடையாது”
.
“இது வெறும் வாதம்”
.
“உன்னால வாதத்துக்கும் உண்மைக்கும் சரியா வித்தியாசம் கண்டுபிடிக்க முடியல.”
.
“உன்னாலதான் காதலுக்கும் நட்புக்கும் சரியான வித்தியாசம் கண்டு பிடிக்க முடியல”
.
“இல்லாத ஒரு விஷயத்தை இருக்குன்னு எப்படி சொல்ல முடியும்?”
.
“நீ உன்னையே ஏமாத்திக்கிறே கவிதா.. கொஞ்சம் மனசை தொட்டு உண்மையை சொல்லு. At least உன் மனசுல நான் இருக்கேன்கிறத  மட்டும் சொல்லிடு. அந்த சந்தோசத்திலேயே நான் ஏன் வாழ்க்கையை கழிச்சுடுறேன்.”
.
“நான் சொல்ல வேண்டியதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டேன் பிரகாஷ். திரும்பவும் சொல்றேன். நீ சந்தோசப்படனும்கிறதுக்காக ஒரு பொய்யை சொல்லவும் மாட்டேன். அதுக்கான அவசியமும் எனக்கு கெடையாது”
.

“சே! ஏன் பொண்ணுங்க எல்லாம் இப்படி கல் மனசுக்காரங்களா இருக்கீங்களோன்னு தெரியல.”
.
“இல்லை! பசங்கதான் ஆண்-பெண் நட்புக்கு சரியான வித்தியாசம் தெரியாம காதல், கீதல்னு உங்களை நீங்களே குழப்பிக்கிறீங்க!”
.
“ஆமாண்டி! நாங்கல்லாம் பைத்தியக்காரங்க. நீங்க ரொம்ப புத்திசாலி பாரு...”
.
“நான் அப்படி சொல்லலியே..”
.
“பின்ன?! இதுக்கு என்ன அர்த்தம்..?”
.
“cool down Prakash! நீ ரொம்ப குழம்பிப் பொய் இருக்கே! நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகப் போகுது.. உன்னையே நம்பி ஒரு பொண்ணு வரப்போறா.. அவளுக்கு நெறைய கனவுகள் இருக்..”
.
“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்.. தயவு செஞ்சு advice  மட்டும் பண்ணாதே”
.
“சரி விடு! என்னை என்னதான் பண்ண சொல்றே”
.
“எதுவும் பண்ண வேணாம்! கொஞ்ச நேரம் பேசாம அமைதியா இரு”
.
“.....”
“.....”
“....”
“....”
“....”
.
“ஏன் கவிதா? இந்த எட்டு வருஷத்துல, எனக்கு என் மனசுல தோனின மாதிரி, உனக்கு எதுவும் தோனல? உன்னோட பாஷையில சொல்லனும்னா   , நம்ம நட்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகணும் னு நீ எப்பவுமே யோசிச்சதில்லையா?”
.
“....”
.
“பதில் சொல்லு கவிதா”
.
“இல்லை பிரகாஷ்! மனசார சொல்றேன்! எனக்கு எப்பவுமே அந்த மாதிரி தோனினதில்ல.நீ நம்புறியோ, இல்லையோ நான் உன்னை நல்ல நண்பனாத்தான் பார்க்குறேன்”
.
“ஆனா என்னால அப்படி நெனைக்க முடியறதில்லையே,”
.
“அது உன் தப்பில்ல பிரகாஷ்.. உனக்கு என்னை பிடிச்சிருக்கு. நான் மனைவியா வந்த நல்லா இருக்கும்னு நீ விரும்புற. அதை எந்த கோணத்திலேயும் என்னால தப்பா நெனைக்க முடியலை.and you have always made me comforortable with you..”
.
“அப்புறம் ஒத்துக்க வேண்டியதுதானே”
.
“see prakash!  திரும்ப சொல்றேன் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இந்த எட்டு வருஷமா என்னை ரொம்ப நல்ல பார்த்துகிட்டு இருந்திருக்கே. நாகரிகமான முறையில காதலை சொல்லியிருக்கே..  starting from exams to interviews ஒவ்வொரு விஷயத்திலேயும் எனக்கு பக்க பலமா இருந்திருக்கே. ஆனா...”
.
“ஆனா.. என்ன”
.
“உனக்கு தெரியாம இல்லை. எனக்குன்னு சில வரை முறைகள் இருக்கு. குடும்ப கட்டுப்பாடுகள் இருக்கு. நான் அதுக்குள்ளேயே வளர்ந்துட்டேன்.”
.
“நான் தான் உங்க வீட்ல வந்து பேசறேங்கிறேனே! அதையும் நீ வேணாம்னுட்டே”
.
“வேண்டாம்.. பிரகாஷ்! அவங்களும் நம்மை நல்ல friends- ன்னுதான் நெனைச்சுட்டு இருக்காங்க .. அவங்களை கஷ்டப்படுத்த வேண்டாமே.”
.
“எப்படி கவிதா.. எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில் வெச்சுருக்கே..”
.
“கேள்வின்னு ஒண்ணு இருந்தா பதில்னு ஒண்ணு இருக்கணுமே பிரகாஷ்!”
.
“...”
.
“...”
.
“ஓகே.. முடிவா நீ என்னதான் சொல்றே...”
.
“உன் கல்யாணத்துக்கு மணப்பெண் தோழியா வர்றேன்னு சொல்றேன்”
.
“நான் அதை கேட்..”
.
“Prakash! நாம பேசினா பேசிகிட்டே தான் இருப்போம்.. விடு எல்லாத்தயும் மறந்துட்டு, enjoy your marriage life..நான் எங்கே போகப்போறேன்.. இங்கேதான், உன்கூடவேதான் இருக்கபோறேன்”
.
“...”
.
“நீயே என்னை மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன். நீ சட்டையை மடிச்சு விட்டிருக்கும் போது பட்டன் போட சொல்வேன். நீ சின்ன சின்னதா குறும்பு பண்ணும்போது உன் தலயில செல்லமா குட்டுவேன். உன் எல்லாக் கவிதைகளையும் முதல் ஆளா நான் தான் படிக்கப்போறேன். உன் எல்லாப் பிறந்த நாளுக்கும் நான்தான் முதல் வாழ்த்து சொல்லப்போறேன்.. சரியா?”
.
“ம்.. சரி..”
.
“ஏன் ‘உர்’ ருன்னு இருக்கே.. இங்கே. அந்த சிங்கப்பல் தெரியுற மாதிரி ஒரு சிரிப்பு சிரி பாப்போம்”
.
“ஈ..ஈ”
.
“yes! Thats my boy! அப்புறம் உன் ஆளு நம்பர் குடு. நான் அவளை கொஞ்சம் சதாய்க்கணும்”
.
“9036131410”
.
“சரி பிரகாஷ்! நான் கெளம்பறேன்.. வீட்டுக்குப் போயிட்டு SMS பண்றேன்”
.
“..வந்து...”
.
“..ம். சொல்லு..”
.
“...”
.
“...”
.
“...You are a beautiful article kavitha! (long pause)
Take care.... and I mean it, really!”
.

.
“... Th.. Thanks Prakash! வரேன்!”

ஒரு காதல் கடிதம் எழுதுவது...

Jun
2012
11

on

2 comments


பொதுவாக ஒரு காதல் கடிதம் எழுதுவதுஅவ்வளவு எளிதன்று…
அது,
கடவுளுக்கு செய்யும்
அர்ச்சனையாகவும் இருக்க வேண்டும்.
வியாபாரி செய்யும்
விற்பனையாகவும் இருக்க வேண்டும்.
.
ஒரே சமயத்தில் அது
நேர்த்தியாக தொடுக்கப்பட்ட
மாலையாகவும் இருக்க வேண்டும்,
சாணையிடப்பட்ட கத்தியாகவும் இருக்க வேண்டும்.
.
மேலாக,
ஒரே சமயத்தில் அது,
குழந்தையின் குரலில் வெளிப்பட்ட
யோகியின் வார்த்தையாகவும்
யோகி பேசும்
மழலை மொழியாகவும் இருக்க வேண்டும்
.
காதல் கடிதம் எழுதும் சில நிமிடங்கள்,
தவத்தின் போதான ஒரு மோன நிலை


காமத்திற்கு பின்பான மௌன நிலை
ஒரு காதல் கடிதம்
எளிதில் பூர்த்தியடைவதில்ல.
.
அது
ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சியாய்
ஒரு பள்ளிக் குழந்தையின் கேள்வியாய்,
ஒரு பக்தனின் இறைத்தேடலாய்
ஒரு வீரனின் வெற்றித் தேடலாய்,
திருப்தியின்றி
தொடர்கிறது...
.
காதல் கடிதம்,
ஒரு தீர்க்க தரிசனத்தோடு எழுதப்படுகிறது
ஒரு தீட்சை பெறுவதற்காக எழுதப்படுகிறது.
பண்பாட்டின் நெறியோடு எழுதப்படுகிறது.
பிள்ளை பெறும் வலியோடு எழுதப்படுகிறது.
.
காதல் கடிதத்தின் முடிவென்பது
ஒரு குற்றவாளிக்கு கிடைக்கும் தண்டனையாகவோ,
ஒரு நோயாளிக்கு கிடைக்கும் மருந்தாகவோ,
ஒரு யாசகனுக்கு கிடைக்கும் பிச்சையாகவோ,
ஒரு பாவிக்கு கிடைக்கும் பாவமன்னிப்பாகவோ
இருந்துவிடலாம்.
.
ஆயினும்
ஒரு காதல் கடிதம்
மன்னிக்கப்பட்ட எழுதுப்பிழைகளுடன்
மெல்லத்துடிக்கும் இதயம் பதித்து
உடலிலிருந்து உயிர் பிரித்து ஊற்றி
ஒரு கலைப்படைப்பின் நேர்த்தியோடு
எழுதப்படுகிறது.
அதாவது..
ஒரு காதல் கடிதம் எழுதுவது,
அவ்வளவு எளிதன்று..

.
காமத்திற்கு பின்பான மௌன


குமார், சசி, சாந்தி அக்கா மற்றும் பிரகாஷ்

May
2012
28

on

No comments


குமார், சசி, சாந்தி அக்கா மற்றும் பிரகாஷ்
 என்ன ஏதோ சினிமாப்பட தலைப்பு மாதிரி இருக்குன்னு நினைக்குறீங்களா? இல்லை. நாம கவனிக்கத் தவறிய சில விஷயங்கள் நம்ம வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கும்கிறத இதைப் படிச்சதுக்கு அப்புறம் நீங்க புரிஞ்சுக்குவீங்க. என் மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சு போன, ஒரு அழிக்க முடியாத காயத்தை ஏற்படுத்தின சில விஷயங்களை உங்க கிட்ட சொல்லப் போறேன்.. மனசிருந்தா கொஞ்சம் feel  பண்ணுங்க!

குமார், சசி, சாந்தி அக்கா மற்றும் பிரகாஷ் இவங்க நாலு பெரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வெண்ணந்தூர் ல முறையே 1999,96,96,97 ல பாஸ் ஆனவங்க. பாஸ் ஆனவங்க மட்டுமில்ல, குறிப்பிட்ட அந்த வருடங்களில் பள்ளியிலேயே முதலிடம் பிடித்தவர்கள்.இதுல பிரகாஷ் பத்தி உங்க எல்லாருக்கும் தெரியும். அது நானேதான்! நாம பேசப்போறது குமார், சசி மற்றும் சாந்தி அக்கா. சசியும் சாந்தி அக்காவும் எனக்கு ஒரு வருசம் சீனியர்ஸ். குமார் என்ன விட ரெண்டு வருஷம் சின்ன பையன். என் தம்பியும் அவனும் ஒரே கிளாஸ்ல படிச்சாங்க.

குமார் ஒரு serious talent. எப்போவுமே முதல் மதிப்பெண் தான் வாங்குவான். என் தம்பியும் அவன விட நல்ல படிக்கணும்னு  எவ்வளோவோ ட்ரை பண்ணான். அவனால முடியல. ஏன்? யாராலையும் முடியல. அவனுக்கு பாடம் நடத்துன ஆசிரியர்களே அதிசயிக்கும் அளவுக்கு பிரமாதமான அறிவு. எங்க பள்ளி நாடகத்துல ராஜா வேஷத்துல நடிச்சு பக்கம் பக்கமான டயலாக் எல்லாம் சர்வ சாதாரணமா பேசிட்டு போனான். குட்டியா, அழகா பேசுற, நல்லா படிக்குற குமார் எங்க குடும்பத்துல எல்லோருக்கும் pet ஆயிட்டான்.அஞ்சாங்கிளாஸ் ல எல்லாரும் எதிர் பார்த்த படி அவன் தான் முதல் மதிப்பெண்ணும் வாங்குனான். ஆனா அதிலிருந்து இதுவரைக்கும் அவன் வாழ்க்கையில எதுவுமே சரியா நடக்கல.

அஞ்சாங்கிளாஸ் முடிச்ச உடனே அவன அவங்க அப்பா வேலைக்கு அனுப்பிச்சுட்டாரு. (அவங்க அப்பா இளநீர் வியாபாரம் தான் செஞ்சுட்டு இருந்தாரு. அவங்க அம்மா கட்டட சிட்டாள் வேலைக்கு போய்க்கிட்டு இருந்தாங்க. மேலும் அவங்க அப்பா ரொம்ப குடிப்பாரு) ஒரு படிக்கிற பையன் படிப்பு வீணாப் போயுரும்னு நாங்கலாம் எவ்வளோவோ சொல்லிப் பார்த்தோம். ஆனா கேட்கல. எங்க பள்ளி ஆசிரியர்களே அவங்க வீட்டுக்குப் போயி எடுத்து சொன்னாங்க. ஆனா என்னால படிக்க வைக்க முடியாது. வேணும்னா நீங்களே கூட்டிட்டு போயி சாப்பாடு போட்டு படிக்க வச்சுக்கோங்க ன்னு திட்டிட்டாரு எல்லோரையும். அங்கேயே முழுக்கு விழுந்து போச்சு அவன் படிப்புக்கு.

அப்புறம் சில வருஷம் குமார் என்ன ஆனான்னே தெரியல..
கொஞ்ச நாள் முன்னாடி ஊர்த்திருவிழா சமயத்துல வீட்டுக்கு வந்திருந்தான் குமார்.கொஞ்சம் தாடி. கலைந்த முடி. ஒரு பழைய லுங்கி. லைட்டா சரக்கு சாப்பிட்டிருந்தான்’.

“பிரகாஷ்! ரொம்ப கலர் ஆயிட்டே.. AC ல தான் வேலையோ” இதுதான் அவன் கேட்ட முதல் கேள்வி. நான் லேசா சிரிச்சேன்.

 அப்புறம் அவன் வேலைக்கு போனது, கஷ்டப்ப்ட்டது, மூட்டை தூக்குனது’ எல்லாம் சொல்லி கடைசியா இப்போ ஓமலூர்ல ஒரு இரும்பு பட்டறை வெச்சுருக்குறது வரைக்கும் எல்லாம் சொன்னான்.

திடீர்னு என் தம்பியையும் பார்த்து, “ரொம்ப சந்தோசமா இருக்குடா. என் கூட படிச்சவன் இன்னைக்கு 25000 ரூபாய் சம்பளம் வாங்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. என்னைய விட கம்மியாத்தான் படிச்ச.. இன்னைக்கு இவ்வளவு நல்லா இரு.க்.க. என் வாழ்க்கைதான் இப்படி ஆயுடுச்... சு”ன்னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டான்.

ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே எங்களுக்கு புரியல. அப்புறம் அம்மாதான் அவன் தலைய கோதி விட்டு “கவலைப்படாதே குமாரு! நல்ல உழைப்பு மட்டும் இருந்தா வாழ்க்கையில நிச்சயம் முன்னுக்கு வரலாம். தப்பான எந்த வழிக்கும் போயிடாதே” ன்னு ஆறுதல் சொல்லி சாப்பாடு போட்டு அனுப்பி வெச்சாங்க.அவன் அழுகை இன்னும் கண்ணுலேயே நிக்குது.

சாந்தி அக்கா! எங்க பக்கத்துக்கு வீட்ல இருந்தாங்க.பேருக்கு தகுந்த மாதிரி சாந்த சொருபினி. மாநிறம் தான்! ஆனா அப்பேர்ப்பட்ட அழகு. இவங்க அஞ்சாம் கிளாஸ் முடிஞ்சு பத்தாம் கிளாஸ் வரைக்கும் படிச்சாங்க.. எனக்கு தெரிஞ்சு அவங்க எக்ஸாம் பேப்பர் தான் எங்க எல்லாருக்கும் மாடல். அவ்வளவு நல்லா எழுதுவாங்க. 

தொடக்கப்பள்ளி முடிஞ்சு எங்க ஊர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிச்சாங்க. அது ஒரு மோசமான ஸ்கூல். அதுவுமில்லாம குடும்ப சூழ்நிலை காரணமாக தினமும் வீட்டு வேலை எல்லாம் செஞ்சிட்டு அப்புறமாதான் ஸ்கூல் போவாங்க. ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து தறி ஓட்டுவாங்க.

இத்தனைக்கும் நடுவுலையும் படிப்புல ரொம்ப கவனமா இருந்தாங்க. எப்பவுமே நல்ல மதிப்பெண்கள்தான். பத்தாம் கிளாஸ்ல கூட 400 க்கு மேல எடுத்தாங்க. அந்த ஸ்கூல்ல 400 மார்க்னா ரொம்ப பெரிய விஷயம். இது 2001 ல. 

ஆனா வசதியின்மை காரணமா அதுக்கு மேல அவங்களை படிக்க வெக்கல. அதுக்கு அப்புறம் நாங்களும் புது வீடு மாறிட்டோம். நானும் +2 முடிச்சு இன்ஜினியரிங் போயிட்டதால அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரில. ஆனா ஒரு சமயம் அவங்களுக்கு கல்யாணம்னு பத்திரிகை வந்தது மட்டும் ஞாபகம் இருக்குது.

அதே திருவிழா சமயம்.. அத்தை வீட்டுக்கு போலாம்னு போய்க்கிட்டு இருந்தேன். எதிர்ல சாந்தி அக்கா! பச்சை கலர் ல ஒரு சேலை கட்டி இருந்தாங்க. நெற்றி நிறைய குங்குமம்.கூடவே ஒரு நான்கு வயது பெண் குழந்தை. வயிறு வேறு பூசியிருந்தது. என்னைப் பார்த்ததும் அவங்களுக்கு முகமெல்லாம் சிரிப்பு.

“பிரகாஷு! எப்புடி இருக்கே?!!”

“நல்லா இருக்கேன்! நீங்க? என்ன இந்தப் பக்கம்”

“ம்.. திருவிழா இல்ல அதான் கோயிலுக்கு வந்தேன்! வாயேன்! வீடு பக்கத்துல தான் இருக்குது, சாப்பிட்டு போ”

“இல்லைக்கா! கொஞ்சம் வேலை இருக்கு இன்னொரு நாளைக்கு வரேன்”

“ம்.. சரிடா... கண்டிப்பா வரணும்.. பெரிய ஆளா வளர்ந்துட்டே! நான் வரேன்! பாப்பா! மாமாவுக்கு டாட்டா சொல்லு” என்று சொல்லி விட்டு மெதுவாக நடந்து போனாங்க.

பி.கு. 1: சாந்தி அக்காவுக்கு ரெண்டாவது ஆண் குழந்தை.இப்போது அவங்களோட முழு நேர வேலையே குழந்தை வளர்ப்புதான்!

சசி, எனக்கு ஒரு வருஷம் சீனியர். வாடா போடான்னு தான் பேசிக்குவோம்.எக்ஸாம்க்கு என்னென்ன படிக்கணும், ஸ்காலர்ஷிப் எப்படி வாங்குறது, talent test னா என்ன? இப்படி பல விஷயங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கான்.  +2 வரைக்கும் அவன்தான் எப்பவுமே ஸ்கூல் பர்ஸ்ட். +2 ல 1097மார்க் வாங்குனான். அப்புறம் இன்ஜினியரிங் படிக்க வசதி இல்லாததுனால டீச்சர் ட்ரைனிங் ஜாயின் பன்னுனான்.

கொஞ்ச நாள் முன்னாடி நானும் அம்மாவும் பக்கத்துக்கு ஊர்ல ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு திரும்பி வந்துகிட்டு இருந்தோம். பக்கத்துக்கு சீட்ல சசி! ரொம்ப சிம்பிளா ஒரு சட்டை, பேன்ட், ஒரு பேரகான் செருப்பு போட்டிருந்தான்.

“சசி! நல்ல இருக்கியா? என்ன பண்ற?”

“நல்ல இருக்கேண்டா. இங்கதான் வித்யா மந்திர் ஸ்கூல்ல டீச்சர் ஆ இருக்கேன்”

மற்றும் சில பரஸ்பர விசாரிப்புகளோடு முடிந்து போனது அந்த சந்திப்பு. என்னவோ, என் வேலை குறித்து சசி ஒரு கேள்வியும் கேட்கல.

பி.கு.2: அந்த ஸ்கூல் ல டீச்சர்ஸ்க்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பாங்கன்னு தெரிஞ்சா உங்களுக்கு கண்ணீரே வரும்!

இந்த சம்பவங்களால மனசு ரொம்ப பாதிச்சுடுச்சு. இந்த மாதிரி சமயங்களில் அம்மா கிட்ட தான் புலம்புவது வழக்கம். இப்பவும் அப்படித்தான்.

“அம்மா! ஏன்மா இப்படி. அவங்க என்ன பாவம் பண்ணாங்க! அவங்களுக்கு மட்டும் ஏன் வாழ்க்கை இப்படி இருக்கு?”

என் கஷ்டமான கேள்விகளுக்கு எல்லாம் ரொம்ப சிம்பிளா ஒரு பதில் தருவதையே வழக்கமாக வைத்திருக்கிறாள் அம்மா!

“எல்லாத்துக்கும் பெத்தவங்க தான் காரணம். தன் பிள்ளைகளோட எதிர்காலத்துக்காக நாம கொஞ்சம் கஷ்டப்படுவோம்னு நினைக்குற எல்லா பெத்தவங்களோட பிள்ளைகளும் நல்லா இருப்பாங்க” ன்னாங்க.எனக்கும் ரொம்ப நியாயமாகப் பட்டது.

நம்மை விட யாரவது ரொம்ப நல்லா வாழ்ந்தா நமக்கு பொறாமையா இருக்கு. அதே சமயத்துல நம்மைவிடதிறமையில் சற்றும் குறைச்சல் இல்லாத, அல்லது நம்மை விட கூடுதல் திறமை படைத்தவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்படும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. கொஞ்சம் அழலாம் போலத்தோணுது.....
.
.
so, இந்த மாதிரி திறமை உள்ள யாரவது சரியான வழிகாட்டுதல் இல்லாம தப்பான வழியைத் தேர்ந்தெடுத்தா முடிஞ்சா உதவி பண்ணுங்க. இல்ல. atleat  ஒரு வழிகாட்டியாகவாவது இருங்கள். நானும் அது போல் ஆக முயற்சி செய்யறேன்!


சொல்வதற்காக!!!

May
2012
22

on

1 comment


                                         கருத்து உபயம்: ரேகா

உன்னிடம் சொல்வதற்காக சில வார்த்தைகள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்!

ஒரு வீடு கட்டும் பணியை விட சுமையானதாகவே தோன்றுகிறது
இந்த வார்த்தை சேகரிப்பு!

உன்னிடம் ஏற்கனவே சைகை மூலமாகவோ, குறிப்புணர்த்தியோ பரிமாறப்பட்ட விஷயந்தான் எனினும் அதை வார்த்தைகளில் வடிப்பது   சற்று சிரமமாகத்தானிருக்கிறது.

நேற்றோ நாளையோ சொல்லியிருக்கவேண்டியது,
புதிதாக முளைத்த மற்றொரு வார்த்தையினால் மறு புனரமைக்கப்பட வேண்டியிருக்கிறது.

தெரிவு செய்யும் ஒவ்வொரு வார்த்தையும்,
என் பெண்மையின் எல்லையை மீறிடாமலும்,
உன் ஆண்மையின் கண்ணியத்தை குலைத்திடாமலும் இருக்க வேண்டியிருக்கிறது.

மேலும் அது,
சர்க்கரை ஆலையில் மாட்டிக்கொண்ட எறும்பின் தித்திப்பாகவுமில்லாமல் தனிமையான தொலைப்பயணத்தின் வெறுமை போலுமில்லாமல்
வெகு இயல்பாய்,நேர்த்தியாய் இருந்திட வேண்டியிருக்கிறது.

ஒரு விவசாயி முதற்கதிர் அறுப்பது போல,
ஒரு களவாணி இருளில் பதுங்குவது போல,
ஒரு தலைப்பிரசவக்காரி குழந்தையைப் பேணுதல் போல,
ஒரு புதுப்பெண்டாட்டி  முதலிரவுக்குத் தயாராகுதல் போல,
கொஞ்சம் பதற்றத்துடனும், ஆகச்சிறந்த பொறுமையுடனும்,
மணிமணியாய்  கோர்க்கப்படுகின்றன வார்த்தைகள்!

ஒரு வேளை பயம் காரணமாகவோ,
தவிர்க்க இயலாத சூழ்நிலை கருதியோ,
சரியான சந்தர்ப்பம் அமையாமலோ,
உன்னிடம் உரைக்கப்படாமலே போகலாம்
இவ்வார்த்தைகள் யாவும்!

ஆனாலும், சற்று முன் கரை ஒதுங்கி,
நீர் சேரத்துடிக்கும் பொன்மீன் போல,
துடித்துக்கொண்டே இருக்கின்றன 
எல்லா வார்த்தைகளும் என்னோடு!

கஜல் காதல் - பள்ளிக்கூடம்!

Mar
2012
20

on

No comments

Drawing courtesy : KBS Saranya

நீ
பள்ளிக்கு வரும்போது 
கவனிப்பதில்லையா?
உன்னைத் தொடர்ந்து வரும்
பட்டாம் பூச்சிகளையும்
வானவில்லையும்!
.

புத்தகத்திற்குள் 
மயிலிறகை வைத்துக்கொண்டு
குட்டி போடும் என்றெண்ணி  
காத்துக்கிடக்கிறாய்!
உன் உதிர்ந்த கூந்தலே 
மயிலிறகாகிப் போனதென்று 
பிதற்றிக்கொண்டிருக்கிறேன் 
நான்!
.
.
"பாடம் புரியவில்லையா?"
எனக் கேட்டு உதடு பிதுக்குகிறாய்
"இதே வகுப்பில் 
நீ உள்ள வரை
எந்தப் பாடமும் எனக்கு 
புரியப்போவதில்லை"என்பதை 
என்று நீ உணரப் போகிறாய்?
.
.
இயற்பியல்
வேதியியல்,
உயிரியலோடு,
காதலியலும்
கற்றுத்தரப் படுகிறது
நீ உள்ள வகுப்பறையில்!
.
.
நீ 
தமிழ்த்தாய் வாழ்த்து 
பாடுவதால்தான்
பள்ளியே தொடங்குகிறது 
என்றென்னும் 
பைத்தியக்கரனாகி விட்டேன் நான்!
.
.
ஹெர்பேரியத்திற்காகப் பூக்கள் 
ஓட்டச் சொன்னால் 
உன் கண்களையும் 
இதழ்களையும் வரைந்து வைத்து விட்டு,
ஆம்பல், மௌவல் என
உளறிக்கொண்டிருக்கிறேன் 
நான்!



.
சத்தியமாக சொல்கிறேன்!
மலர் வரைபடம் 
வரையும் போதெல்லாம் 
உன்னைத்தான் எண்ணிக் 
கொண்டிருக்கிறேன்!




மௌன ராகங்கள்!

Feb
2012
29

on

No comments


என் நீண்ட இரவுகளைச்
சுருக்குவதற்கென்றே
பிறந்த
குட்டி நிலா நீ!

எங்கிருந்து
கற்றுக்கொண்டாய்!
பகலில்
ஒரு மொழி பேசவும்,
இரவில்
ஒரு மொழி பேசவும்!

எழுந்தவுடன்
பேசி விடாதே!
முந்தைய இரவின்
மௌன ராகங்கள்
இன்னும் கொஞ்ச நேரம்
இசைக்கப்படட்டும்!

ஸ்பரிசங்களைப்
புரிந்து கொள்வதற்காகவே
வடிவமைக்கப்பட்டது
இரவு!

காதல் தேவதை
இரவு நேரங்களில்
அசுர வடிவம்
கொள்கிறாள்
மெளனமாக!

படுக்கைகளின்
சுருக்கங்களில்
ஒளிந்துள்ளன
ஏராளமான
இரவு
ஓவியங்கள்!

வேண்டுகிறேன்!
இன்றைய இரவு
நேற்றையது போலவும்
இருக்க வேண்டும்!
சற்று புதிதாகவும்
இருக்க வேண்டும்!