Archive for January 2012

நண்பன்-விமர்சனம்

Jan
2012
15

on

No comments


கல்லூரி. ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம்.ஒரு சில வருடங்களில் வாழ்க்கை முழுவதற்குமான பாடத்தைக் கற்பிக்கும் இடமாக கல்லூரி உள்ளதென்பதை உங்கள் ஒருவராலும் மறுக்க முடியாது. முக்கியமாக கல்லூரி நட்பு. வாழ்க்கையில் முற்படும் பாதைகளில் ஒன்றைத் தெரிவு செய்வதற்கு நட்பே உத்வேகமாகவும் உந்துதலாகவும் அமைகிறது. நல்லதோர் நட்பு வாழ்வினைச் செம்மைப்படுத்தும் என்பதில் எந்தஒரு ஐயமும்இல்லை.
.
மனத்தின் இறுக்கங்களை நட்புதான் எவ்வளவு லேசாக தளர்த்தி விட்டுப் போகின்றது. கஷ்டமான, பகிர சுலபமல்லாத எத்தனையோ விஷயங்களை எளிதாக எடுத்துரைக்கிறது. மனதின் அறுவறுப்புகளை, பாவங்களை எத்தனை சுத்தமாக அழித்துவிடுகிறது. குறுகிய மனங்களை விஸ்தாரப்படுத்தும் அமானுஷ்ய சக்தி நட்பிற்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.
.
ஒவ்வொரு நட்பும் ஒரு வித்தியாசமான முகம் கொண்டிருக்கிறது. கல்லூரியில் படித்தபோது சரக்கடித்த பின்பு எல்லோர் எடுக்கும் வாந்தியையும் மனம் கூசாமல் சுத்தம் செய்யும் லோகநாதன், காசு கேட்டால் எவ்வளவு வேண்டுமென்று கேட்காமல் கொடுக்கும் பிரசாத். எமோஷனல் ஆகி அவ்வப்போது முத்தம் கொடுக்கும் (இன்னொரு) லோகநாதன், எல்லா சமூக சேவைகளுக்கும் தன்னை முன்னிறுத்தும் சண்முகநாதன்,அடுத்த ஜென்மத்தில் நாமெல்லாம் சகோதரர்களாக பிறக்க வேண்டும் என்று புலம்பும் கேசவன், பாரபட்சமில்லாமல் எல்லோரையும் திட்டும் தோழி சரண்யா, சிறுசிறு சண்டைகள் போட்டும், வாழ்வின் எதார்த்தங்களை அழகாக உரைக்கும் தோழி ரேகா என என் கல்லூரி நட்பு வட்டம் பன்முகம் கொண்டது.  இவை ஒவ்வொன்றிடமிருந்தும் சேகரித்த விஷயங்களின் தொகுப்புதான் நானும், நீங்களும். 
.
கல்லூரயில் கேம்பஸ் இன்டர்வியுக்கள் நடந்து கொண்டிருந்த நேரம். வேலை கிடைத்த சந்தோஷத்தில் பலர் ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். அப்போது மீதமிருக்கும் சிலருக்கு அந்நேரத்தில் யார் உதவியாக இருப்பது  என்று கேட்ட போது நண்பன் தினேஷ்குமார், “அதான் சுனாமி இருக்கான்ல. அவன் பார்த்துக்குவான்” என்று சொன்ன வார்த்தைகள் இன்னும்  என் மனதில் ஆழமாக இருக்கின்றது. கல்லூரியில் “The best student of the department” வாங்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறாமல் போனதை விட இந்த வார்த்தைகள் பெரிய மகுடமாக தோன்றுகின்றன. 
.
கல்லூரியில் நாம் கொண்ட நட்பே நம் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த நட்பு பெரிதாக அளப்பர்கறிய பிற்பலன் ஒன்றையும் எதிர்பார்க்காதது. நட்பின் பிரதிபலனாக நட்பு ஒன்றே இருக்க முடியும். என் நண்பர்களுக்கு அத்தகையதொரு பிரதிபலனை என் வாழ்வில் செய்யமுடியுமெனில் அதையே நான் பெற்ற வரமாகக் கருதுகிறேன்.
திரைப்பட விமர்சனம் எழுதும் முன் இவ்வளவு எழுதியிருக்கிறேன் என்பதிலிருந்தே படம் என்னை எவ்வளவு பாதித்திருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்திருபீர்கள். “”த்ரீ இடியட்ஸ்” படம் பார்த்தபோதே உணர்ச்சி வசப்பட்டு புலம்பியவன் நான். இப்படி மீண்டும் புலம்ப விட்டு விட்டார்கள். “”த்ரீ இடியட்ஸ்” ற்கும் “நண்பன்” க்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது கூட கஷ்டம்தான்(பாடல்கள் தவிர்த்து) ஆனால் அது ஒரு குறையாகவே தெரியவில்லை. மேலும் சங்கரிடமிருந்து இப்படி ஒரு படம் வரும் என்றால் எந்த ஒரு குறையையும் தாங்கிக்கொள்ளலாம்.
.
நட்பின் பெருமையை அது ஏற்படுத்தும் வாழ்வியல் மாற்றங்களை இவ்வளவு அழகாக எடுத்துரைக்க இதற்குப்பின்பு ஒரு படம் நிச்சயமாக வரப்போவதில்லை. நட்பு தவிர்த்து, அந்த அப்பா மகன் பேசும் சீன். அந்த சீனில் நீங்கள் கண் கலங்கவில்லை என்றால் ஒன்று உங்களிடம் ஏதேனும் ஒரு குறை இருக்கும். இல்லை, (மன்னிக்கவும்) உங்கள் அப்பாவிடம் ஏதேனும் குறை இருக்க வேண்டும். அவ்வளவு அற்புதமான காட்சி. அது ஒன்றிற்காக மட்டுமே எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பார்க்கலாம்.
.
டெக்னிகல் விஷயங்களை எல்லாம் பற்றி பேசி ஒரு சீறிய கலைப்படைப்பை அவமானப்படுத்த விரும்பவில்லை. ஆனால் என்ன.. இலியானாவை இன்னும் கூட கொஞ்ச அழகாகக் காட்டி இருக்கலாம் என்று தோன்றியது.(ஹி.. ஹி..)  
.
வாய்ப்பு கிடைத்தால் உங்கள் உற்ற நண்பர்களோடு சேர்ந்து போய் படம் பாருங்கள். படம் முடிந்த பின்பு நீங்களே ஒருவரை ஒருவர் மெச்சி கட்டிக்கொள்வீர்கள். அதுதான் அமீர்கானுக்கும், சங்கருக்கும் கிடைத்த வெற்றி!

அசுரக் கலை

Jan
2012
02

on

No comments



கொஞ்சம் பொறு
விளக்குகள்
அணைக்கப் படட்டும்!
.

அறைக்கு வெளியே
ஒலித்துக் கொண்டிருக்கிறது
மங்கள இசை,
உள்ளேயும்!
.
நான் ஆண்,
நீ பெண்,
இடம் மாறுதலுக்கு
உட்பட்டு!
.
ஒரு வியர்வை
விளையாட்டு!
குளித்து முடித்த பின்னும்
பின்பு
குளிக்கும்  வரையிலும்!
.

நம்புவோம்
நிகழ்வது
நிஜம்!
.
அனுமதி
மறுக்கப்படும் போதுதான்
ஆரம்பமே ஆகிறது
அது!
.
இருளிலே உதித்து
விடியலில்
அஸ்தமிக்கும்
அசுரக் கலை!
.
இழந்தது காட்டிலும்
பெற்றது அதிகம்
இருவருக்குமே!
.

சலிப்பதேயில்லை
தேடுவது
கிடைக்கும் வரையிலும்
கிடைத்ததை
தொலைக்கும் வரையிலும்!

விடுமுறை டைரி

Jan
2012
02

on

No comments


கடந்த வாரம் வியாழக் கிழமை. அப்பா பிறந்த நாள். காலையில் எழுந்து டிரைவிங் கிளாஸ் சென்று திரும்ப வந்தவுடன் அம்மா என்னை அழைத்தார். 
“கண்ணு! இன்னைக்கு இருந்து ஒரு சபதம் எடுத்துக்கிறேன். இனிமேல் யாரையும் குறை சொல்லக் கூடாது. இன்னொருத்தங்க யாரைப் பத்தியாவது குறை சொன்னாலும் அதை நம்மளோட வச்சிக்கணும். மேலும், நம்மளை பத்தி நம்ம கிட்டே யாரவது குறை சொன்னாலும் அதை பெருசா எடுத்துக்க கூடாது”  
(எங்க அம்மா உபயோகித்த வார்த்தைகளை அப்படியே எழுதி இருக்கிறேன். இது உங்களுக்கு சற்று வித்தியாசமாகத் தோணலாம். ஆனால் எனக்கு இது புதிதல்ல. எங்கம்மா அற்புதமான வார்த்தைகளின் சொந்தக்காரி. அம்மாவின் சொற்கள் ஒருவரை எளிதில் வசியப்படுத்தி விடும். அதே சமயத்தில் மிகவும் சங்கடமான விஷயத்தை கூட வெகு அனாயசமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்.)
சரி விஷயத்திற்கு வருவோம்.  நான் கேட்டேன். “அம்மா! என்ன இந்த திடீர் மாற்றம்?”
“இல்லைடா! சும்மா தோனுச்சு. எனக்கும் வயசாகுதுல்ல. மனசு பக்குவப்படுது”
“அம்மா!வர வர உன் பக்குவத்துக்கு ஒரு அளவே இல்லாம போயிகிட்டு இருக்குது. அது சரி இதெல்லாம் நீயே யோசிக்கிறியா? இல்ல பதினொரு பேர் கொண்டா குழு எதாச்சும் வெச்சு இருக்கியா”?”
அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் அம்மாவுக்கும் மகனுக்குமான ரகசிய சம்பாஷணைகள். இது போல இன்னும் சில இந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்து விட்டன. அவற்றையும் பார்ப்போமே!

2...
பேருந்தில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். ஒரு 16 –17 வயசிருக்கும். அழகாக தலைக் குளித்திருந்தாள். பூவைத்திருந்தாள். வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவிடம் “ அம்மா ஒரு பொண்ணை பஸ்-ல பார்த்தேன். கறுப்பா  தான் இருந்துச்சு. ஆனா ரொம்ப அழகா இருந்துச்சு.”
அதுக்கு அம்மா சொன்னாங்க “இந்த வயசுல உனக்கு யாரைப் பார்த்தாலும் அழகாத்தான்டா தெரியும்!”

Read more »