சொல்வதற்காக!!!

May
2012
22

on

1 comment


                                         கருத்து உபயம்: ரேகா

உன்னிடம் சொல்வதற்காக சில வார்த்தைகள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்!

ஒரு வீடு கட்டும் பணியை விட சுமையானதாகவே தோன்றுகிறது
இந்த வார்த்தை சேகரிப்பு!

உன்னிடம் ஏற்கனவே சைகை மூலமாகவோ, குறிப்புணர்த்தியோ பரிமாறப்பட்ட விஷயந்தான் எனினும் அதை வார்த்தைகளில் வடிப்பது   சற்று சிரமமாகத்தானிருக்கிறது.

நேற்றோ நாளையோ சொல்லியிருக்கவேண்டியது,
புதிதாக முளைத்த மற்றொரு வார்த்தையினால் மறு புனரமைக்கப்பட வேண்டியிருக்கிறது.

தெரிவு செய்யும் ஒவ்வொரு வார்த்தையும்,
என் பெண்மையின் எல்லையை மீறிடாமலும்,
உன் ஆண்மையின் கண்ணியத்தை குலைத்திடாமலும் இருக்க வேண்டியிருக்கிறது.

மேலும் அது,
சர்க்கரை ஆலையில் மாட்டிக்கொண்ட எறும்பின் தித்திப்பாகவுமில்லாமல் தனிமையான தொலைப்பயணத்தின் வெறுமை போலுமில்லாமல்
வெகு இயல்பாய்,நேர்த்தியாய் இருந்திட வேண்டியிருக்கிறது.

ஒரு விவசாயி முதற்கதிர் அறுப்பது போல,
ஒரு களவாணி இருளில் பதுங்குவது போல,
ஒரு தலைப்பிரசவக்காரி குழந்தையைப் பேணுதல் போல,
ஒரு புதுப்பெண்டாட்டி  முதலிரவுக்குத் தயாராகுதல் போல,
கொஞ்சம் பதற்றத்துடனும், ஆகச்சிறந்த பொறுமையுடனும்,
மணிமணியாய்  கோர்க்கப்படுகின்றன வார்த்தைகள்!

ஒரு வேளை பயம் காரணமாகவோ,
தவிர்க்க இயலாத சூழ்நிலை கருதியோ,
சரியான சந்தர்ப்பம் அமையாமலோ,
உன்னிடம் உரைக்கப்படாமலே போகலாம்
இவ்வார்த்தைகள் யாவும்!

ஆனாலும், சற்று முன் கரை ஒதுங்கி,
நீர் சேரத்துடிக்கும் பொன்மீன் போல,
துடித்துக்கொண்டே இருக்கின்றன 
எல்லா வார்த்தைகளும் என்னோடு!

1 comment

Leave a Reply