காதலிகள் ஜாக்கிரதை!

Dec
2011
21

on

No comments



 இதுவரைக்கும் குறைந்தபட்சம் சுமார் 10-லிருந்து அதிகபட்சமாக 15-பெண்கள் வரை காதலித்திருப்பேன். இந்த 15-ல் யார் சிறந்தவள்? என்பதை எண்ணிப் பார்க்கையில் ஒரு ஏமாற்றமே மிஞ்சுகிறது. காரணம் யாரும் சிறந்தவர்கள் அல்ல என்பதனால் அல்ல. சிறந்தவள் என்று யாரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்னால். .(உங்கள் சகிப்புத்தன்மையை கொஞ்சம் கூட்டிக் கொண்டு அடுத்த வரியைப் படியுங்கள்) காதலிகளுக்கிடையே பாரபட்சம் பார்ப்பதென்பது என்னைப் பொருத்த வரையில் தாய் தன் பிள்ளைகளுக்கு இடையே பாரபட்சம் பார்ப்பது போலாகும்

காதலிகள் குறித்த இந்தக் கட்டுரையை ஒரு சுவாரஸ்யத்திற்காகவோ, உங்களது கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்ற “எழுத்தாள ஆசையிலோ” எழுதவில்லை. மனதில் வெகு நாட்களாக மண்டிக்கிடப்பதை உங்களிடம் பகிர வேண்டுமென்ற  ஓர் உணர்வோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மேலும் காதலிகள் என்ற வகையில் நான் என் தாயையோ, இரண்டாம் வகுப்பு வடிவு டீச்சரையோ, பேருந்து நிலையத்தில் சென்ற வாரம் பார்த்த அந்த மலையாளப் பெண்ணையோ, முகத்தில் சுருக்கம் விழுந்த போதிலும் மஞ்சள் பூசி அழகாக இருக்கும் பக்கத்து வீட்டு பாட்டியயோ சேர்க்கவில்லை. என் காதலிகள் அனைவருமே பெரும்பாலும் என் வயதொத்தவர்கள், கூடப் படித்தவர்கள்.நன்கு பழகிய அண்டை வீட்டு மங்கைகள்.சுருங்கச் சொல்வதெனில் நான் மணம் செய்து   கொள்ள எல்லாத் தகுதிகளும் கொண்டவர்கள்.(அவர்கள் தேடும் தகுதிகள் எனக்கிருக்கிறதா என்ற வாதங்கள் எல்லாம் இப்போது வேண்டாமே!)

ஆச்சர்யம் என்னவென்றால், என் காதலிகளுக்கிடையே ஒரு பொதுவான குணத்தை என்னால் வரையருக்க முடியவில்லை என்னால்.ஒருத்தி மிக நெட்டையானவள், ஒருத்தி சராசரி உயரத்திற்கும் சற்று குறைவு,ஒருத்தி மிக அமைதியானவள்.இன்னொருத்தி ரொம்ப குறும்புக்காரி.ஒருத்தி மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பாள். இன்னொருத்தி ரெட்டை ஜடைக்காரி.ஒருத்தி மிக ஒல்லி மற்றொருத்தி 80  கிலோ எடை இருப்பாள். ஒருத்தி என்னை விட வயது மூத்தவள். இன்னொருத்தி என்னை விட 4-5 வயது குறைந்தவள். ஆக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணிகள் காதலை நியாயப்படுத்துகின்றன.எனினும் என் கண்களுக்கு என் எல்லாக் காதலிகளும் அழகாக இருக்கின்றனர், இன்னும் (ஹி.ஹி..!)

என் அலுவலகத்தில் ஒரு இரட்டைச் சகோதரிகள் இருக்கிறார்கள்... கொடுமை என்னவென்றால் அவர்கள் இருவரையுமே நான் காதலிக்கிறேன்... (என்ன வாழ்க்கைடா  இது!)

என் காதல்கள் என்னை எப்போதும் இலக்குகளிலிருந்து சிதற வைத்ததில்லை.காதல் என்று சொல்லிக்கொண்டு, சாப்பிடாமல் இருந்து கொண்டோ, ரத்தத்தில் கடிதம் வரைந்து கொண்டோ, படிப்பில் கவனம் செலுத்தாமலோ ஒரு போதும் இருந்ததில்லை.(ஆதலால்தான் நீ கொண்டவை காதலே இல்லை என்று கூறுகின்றனர் என் நண்பர்கள்.ஒருவகையில் அது உண்மையாகவும் இருக்கலாம்)

ஏனோ இவற்றுள் ஒரு காதலையும் யாரிடமும் நான் வெளிப்படுத்தியதே இல்லை. அந்த அளவுக்கு தைரியமும் இருந்ததில்லை.யதார்த்தமாகக் கூற வேண்டுமென்றால் என் காதலிகள் யாவரும் என் மனைவி எப்படி இருக்க வேண்டுமென்ற என் ஆசையின் ஒத்திகை வடிவங்களாக இருந்திருக்கிரார்களே ஒழிய அவர்களே என் மனைவியாக வர வேண்டும் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. (மேற்குறிப்பிட்ட வரியையே காதலின் வரையரையாகவும் நான் கொள்கிறேன்) 

அறிவுப்பூர்வமான அல்லது உணர்வுப்பூர்வமான வரையரைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒவ்வொரு காதலும் இதயத்தின் ஓரத்தில் ஓர் இனிய இசையை மீட்டிக் கொண்டிருக்கின்றன ஆழமாகவும், ஆத்மார்த்தமாகவும்

நிற்க. “இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கொஞ்சம் அழகான பெண்ணா? ஜாக்கிரதை! ஏதேனும் ஒரு சமயத்தில் நீங்கள் கூட என் காதலியாக இருந்திருக்கலாம், இருக்கலாம்!”
நன்றி!

Leave a Reply