அந்நியம்

Dec
2011
22

on

No comments

"அப்பா! இன்னும் ஸ்பீடா போப்பா! இன்னும் ஸ்பீடா.. இன்னும் இன்னும்...!" இப்படித்தான் வழக்கமாகக் கூவிக் கொண்டே வருவான் சின்ன ராசு, காலையில் கடை திறக்க அப்பாவுடன் சைக்கிளில் வரும்போதும் மாலையில் கடை மூடிவிட்டு வீடு திரும்பும் போதும்
.

"
என்னப்பா ! இவ்வளவு ஸ்பீடுதான் போவியா?  நான் பெரியவனாகி எவ்வளவு ஸ்பீடா ஓட்டப் போறேன் பாரு" என்று சமயங்களில் சவால் வேறு  விடுவான் அப்பாவுக்கு 
.

சைக்கிள் வாங்கி கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது. கூடப் படிக்கும் பிள்ளைகள் வீட்டில் வண்டி இருப்பதாகவும் தன வீட்டில் வண்டி இல்லாவிடினும் ஒரு சைக்கிளேனும் வாங்குமாறு அப்பாவை நச்சரித்து ஒரு வழியாக சைக்கிளும் வாங்கியாயிற்று.

 
சைக்கிள் வாங்கியபின் அந்த தெருவிற்கே ராஜாவாகத் தன்னை உணர ஆரம்பித்தான் சின்ன ராசு. 

பக்கத்து வீட்டுப் பிள்ளைகளிடம் தன் சைக்கிளைக் காண்பித்து பெருமை பேசுவதும், சைக்கிளை மெதுவாகத் தெரு முனை வற்றை தள்ளிக்கொண்டே போய் மற்ற பிள்ளைகளை ஏளனமாகப் பார்ப்பதும், தன்னை விட வயது மூத்தப் பிள்ளைகள் சைக்கிளில் ஒரு ரவுண்டு கேட்டாலும் கொடுக்காமல் போவதுமாக அவனது செய்கைகள் அவனுக்கு சைக்கிள் மீதிருந்த அபரிமிதமான ஆசையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன. 

சைக்கிளைத் தூசிதுடைப்பது, கழுவி விடுவது, சிறிசிறு மலர்கள் கொண்டு அதனை அலங்கரிப்பது என எப்போதும் சைக்கிளுடனேயே தன் நாட்களை கழிக்கத் தொடங்கினான். முன்பை விட தற்போது அவனுடைய நாட்கள் மிகவும் நீளமானதாகவும் சுறு சுறுப்பாகவும் ஆகிவிட்டன.

காலையில் கூட அப்பா எழும்போதே எழுந்து விடுகிறான். அப்பாவுடன் சைக்கிளில் கூட செல்ல வேண்டும் என்பதற்காகவே கடை திறக்க தினமும் தானும் உடன் வருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டான். ஒவ்வொரு கணமும் சைக்கிளைப் பற்றி ஏதேனும் யோசித்துக்கொண்டே அவனது பயணங்கள் தொடர்ந்தன. 


வழியெல்லாம் கேள்விகளால் அப்பாவைத் துளைத்து விடுவான். 

"அப்பா! மண் ரோடுல போன சைக்கிள் பஞ்சர் ஆகிடுமாப்பா?"
"அப்பா! சைக்கிள் டயர் எத்தனை நாளைக்கு ஒரு தடவை காத்து புடிக்கணும்?"
"
அப்பா! நான் சைக்கிள் ஓட்டணும்னா எவ்வளவு பெரிய ஆள் ஆகணும்? "
"
அப்பா! சைக்கிள் ல வேற பெல் சவுண்ட் வெக்கலாமா ?"

சிரித்துக்கொண்டே ஒவ்வொரு கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லுவார் அப்பா!

விடுமுறை நாட்களில் கடைக்குச சென்று சைக்கிளின் மீதமர்ந்து மணிக்கணக்காக சக்கரத்தை சுற்றிக்கொண்டே இருப்பான்(அரை பெடலில் தான்!) சீக்கிரமாக வளர்ந்து குரங்கு பெடல் - ஆவது கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆசை கொஞ்சம் வெறியாகவே மாறியிருந்தது.

சில சமயம் சைக்கிளை சுற்றி ஓடி விளையாடுவான். சில நேரம் பேசிக்கொண்டிருப்பான். அவ்வளவு ஏன்? சமயங்களில் செல்லச் சண்டை கூட போடுவான்! கிட்டத்தட்ட சைக்கிளைத் தன் சகோதரன் போல கவனித்துக் கொண்டான். சைக்கிள் மட்டுமே அவனது உலகமாக மாறிப்போயிருந்தது!

ஒரு நாள் வழக்கம் போல பள்ளியிளிருந்து கடைக்கு வந்தபோது அங்கே சைக்கிள் இல்லை. அப்பாவிடம் கேட்டதற்கு கைச்செலவுக்கு காசு இல்லாததால் அதை அடகு வைத்து விட்டதாகக் கூறினார். 

சின்னராசுவால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. வெகு நேரம் அழுதான். தன் உலகம் அழிந்து போனது  போலவும், அவ்வுலகத்தில் தான் தனிமைப்பட்டு விட்டதாகவும் கருதி அழுது கொண்டே இருந்தான். எவ்வளவோ சமாதானப் படுத்தியும் கேட்கவில்லை.

ஒரு வாரத்திற்குப் பின் ஒரு நாள் கலையில் அப்பா எழுப்பினார். "டேய்! சைக்கிளை வாங்கிட்டு வந்துட்டேன்! போய்ப் பாரு"

வேகமாகே ஓடிப் போய் சைக்கிலருகே நின்றான். சிறிது நேரம் அதனையே உற்றுப் பார்த்தான். அருகிலிருந்த சுவரில் சாய்ந்து கொண்டு அதனயே வெறித்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து வந்த அப்பா கூறினார் "சரி! போய் சட்டை போட்டு கிட்டு வா! கடைக்குப் போகலாம்". சற்று நேரம் யோசித்த பின்பு, ஓடிப்போய் படுத்துக்கொண்டே உரக்கக் கத்தினான் "நீ  போப்பா! நான் இனிமே வரல.."  

Leave a Reply