காதலர் தினக் கதைகள்

Feb
2012
13

No comments

காதலின் பரிசு

image

சென்ற வாரம்.இதே நாள். “காதலர் தினத்திற்கு என்ன பரிசளிக்கப் போகிறாய்? என்றாய்.

“வருடமெல்லாம் நமக்கு காதலர் தினம்தானே! தினமொரு பரிசு வேண்டுமா உனக்கு? என்றேன்.

“உன்னைத் திருத்தவே முடியாதுடா!” என்றொரு முத்தமிட்டாய்.

காதலின் உச்சகட்ட பரிசு கேட்காமலே கிடைத்தது அன்று.

முத்தமிட்டாய்

image

தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்தேன். “சாருக்கு என்ன அவ்வளவு யோசனை?” என்று தோள் தட்டினாய். “இல்லை. சற்று முன் நீ முத்தமிட்டாய் எனச் சொல்வதா? இல்லை, சற்று முன் நீ இட்ட முத்தம் மிட்டாய் என்று சொல்வதா - என யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்றேன்.

“அய்யய்யோ! ஒரு வாரத்திற்கு முன்பே இவனுக்கு காதலர் தின பித்து பிடித்துவிட்டது” என்று எழுந்து ஓடினாய். உன் பாதக் கொலுசுகளின் சிணுங்கலில் தீவிரமாய் பரவ ஆரம்பித்திருந்தது காதல் ஜுரம்.

காதல் குட்டுகள்

image

“என்ன செய்வது? காதலர் தினம் செவ்வாயில் வருகிறதே?" என்று அச்சத்துடன் கேட்டாய். “செவ்வாயிலா? நான் பூமியில் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்” என அதிர்ச்சியானேன்.

“மொக்கை போடாதேடா! என்று செல்லமாகக் குட்டினாய். இந்தக் குட்டுகள் கிடைக்குமெனில் எத்தனை மொக்கைகளும் (இத்துடன் சேர்த்து) போடலாமடி!” என்று எண்ணிக் கொண்டேன் நான்.

பிறந்த நாள்!

image

இன்று காலை. முழு நிலவின் பொலிவுடன் வந்துகொண்டிருந்தாய். புத்தம் புது ரோஜா ஒன்றை நீட்டி “பிறந்த நாள் வாழ்த்துக்கள்“ என்றேன். “இன்று என் பிறந்த நாள் இல்லையே?!” என்று எதிர் வினவினாய், குழப்பத்துடன்.

“அய்யய்யோ! இன்றுவரை காதலர் தினம் என்பது நீ பிறந்த தினம் தான் என்றெண்ணிக் கொண்டிருக்கிறேனே" என புலம்பினேன் பரிதாபமாய். “சீ போடா!” என நீ என்னைத் துரத்தத் தொடங்கினாய். அங்கு செல்லமாய் விளையாடத் தொடங்கி இருந்தது காதல்.

கடைசி காதலர் தினம்.

image

“இதுதான் நாம் கொண்டாடுகிற கடைசி காதலர் தினம்“ என்றேன். அதிர்ச்சியாகி, சில நொடிகளில் கண்களில் நீர் துளிர்த்தாய்.

”ஹேய்! இந்த வருடம் உன்னைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்" என்றேன். அழுகை ஊடலாகி,ஊடல் உணர்ச்சிகளாகி, உணர்ச்சிகள் ஆனந்தமாய் பெருக்கெடுத்த வேளையில், சில காதல் மேகங்கள் சூழத் தொடங்கின, மிக நெருக்கமாய்!

 

Leave a Reply