ஹுமாயரா

Oct
2021
15

1 comment

 

ஐன்தோவனில் இருந்து ஆம்ஸ்டெர்டம் விமான நிலையத்திற்கு இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம். பக்கத்து வீட்டில் வசிக்கும் நியூசிலாந்துக்காரர், மார்ட்டின் ட்ராப் செய்வதாகச் சொல்லியிருந்தார். குளிர் 6 டிகிரி. உறையும் கைகளைத் தேய்த்துக்கொண்டே, மார்ட்டினுடன் கடந்த வாரம் செய்த பார்பேக்யூ குறித்துப் பேசிக்கொண்டு இருந்தாள், ஜோதி, ஐன்தோவன் ஃபிலிப்ஸ் ஹெல்த்கேரின்  கம்ப்யூட்டர் டோமோகிராபி பிரிவுக்கு R&D டைரக்டர் ஆக இருக்கிறாள். மார்ட்டினும் ஜோதியும் கொஞ்ச நாளாக டச்சு மொழி கற்கிறார்கள். இப்போதெல்லாம் டச்சில் தான் பேசிக் கொள்கிறார்கள். மகள் ஹுமாயரா, ஒரு குட்டி டெட்டி பியரை தோளில் போட்டுக்கொண்டு பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

"எல்லாம் செக் பண்ணிட்டேன் ஜோதி, நீ ஒரு தடவை செக் பண்ணிக்கோ". தீனதயாளன், ASML ல் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் லீட்.

"நீ செக் பண்ணா எல்லாம் சரியாத்தான் இருக்கும் மாமா"

"க்கும்.. நேத்து வரைக்கும் பேசக்கூட நேரமில்லை. இப்போ மாமாவா.. ஊருக்கு கெளம்புனாலே சின்ராசு  குஷி ஆயிடற..."

"டேய்.. அதான் கெளம்பியாச்சு இல்ல.. அப்புறம் என்ன? இந்தா"

"என்ன இது?"

"சாப்பிடு.. German Chocolate, நேத்து வரும்போது வாங்கிட்டு வந்தேன்.. பாவம் எல்லாத்தையும் பேக் பண்ணி களைச்சுப் போய்ட்ட"

"என்னடி... லஞ்சமா"

"அப்படியும் வச்சுக்கலாம்"

 "உன்னை...". கையை இழுத்து, அவள் லேசாகத் தடுமாறும் போது, லாவகமாக அவள் இடுப்பைச் சுற்றி வளைத்து, காதைக் கடித்து விட்டான். பதிலுக்கு இவள் அவன் தலை முடியைக் கலைத்து விட்டுக் கொண்டிருந்தாள். ஓரிரு நிமிடங்களில் கடியும், கலைத்தலும், முறையே முத்தங்களாக மாறி இருந்தன.மார்ட்டின் பேக்குகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார்.

 ====

"அப்பா. கணக்கில் 98 மார்க் வாங்கியிருக்கேம்ப்பா. ரெண்டு மார்க்  குறைச்சுட்டங்க. கேள்வில simplify பண்ண சொல்லல, நானும் பண்ணல.மேடம் தப்பா திருத்திட்டாங்க". ஜோதிக்கு மனம் ஒப்பவே இல்லை. ஐந்தாம் வகுப்பு வரை கணக்கில் எப்போதும் நூறுதான். ஆறாம் வகுப்பு காலாண்டில் இரண்டு மதிப்பெண் குறைவு.

"அடுத்த தடவை விடக் கூடாதும்மா. கண்டிப்பா என் பொண்ணு நூறுதான் வாங்கணும்".

"கண்டிப்பா அப்பா. சரண்யா இந்த தடவை நூறு வாங்கியிருக்கா".

"நல்லதும்மா. அப்புறம்… நம்ம ஊர்ல கீதா டீச்சர் டியூஷன் வெக்கறாங்க. உன்னை சேத்து விடறேன்"

"சரிப்பா. போறேன்".

"இப்போ டியூஷன் எதுக்கு? அவ நல்லாத்தான படிக்கிறா. டியூஷன் சேத்துற காசுக்கு ஒரு நகைச் சீட்டு போடுவோம். அவ கல்யாணத்துக்கு ஆகும்.

"ஏய். படிக்கிற பிள்ளை முன்னாடி கல்யாணம் அது இதுன்னு பேசிக்கிட்டு. போடி அந்தப்பக்கம்"

 ஜோதி அப்பாவுக்கு சரஸ்வதியே தனக்கு மகளாகப் பிறந்திருப்பதாக எண்ணம். தனது சக்திக்கு மீறிய பள்ளியில் தான் அவளைப் படிக்க வைக்கிறார். அவ்வப்போது எதிர்பாராமல் வரும் குடும்பச் செலவுகளுக்காக கொஞ்சம் கடன் வேறு சேர்ந்து விட்டது.

============

Lufthansa Welcomes You. Flight number 40651, Amsterdam to Bangalore will start boarding in 1 hour”.

பிசினஸ் கிளாஸ் லௌஞ்சில் பர்கர் சாப்பிட்டுக் கொண்டே ஆஸ்திரேலியாவின் Big Bash League ஐ ஸ்ட்ரீம் செய்து பார்த்துக் கொண்டிருந்தான், தீனதயாளன். ஹுமாயரா, மடியில்  தூங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் "The Joy of leadership" படித்துக்கொண்டே தோளில்  சாய்ந்திருந்தாள் ஜோதி.

"DD..."

"..ம்"

"கொஞ்சம் டயர்ட் ஆ இருக்கு"

கண்களை சுருக்கியபடி, "..ம்??!"

"ம்".

"சரி, படுத்துக்கோ. வெயிட் எதுவும் தூக்காத. I’ll see, whether I can manage with an attendant here"

"இல்லடா. It’s alright"

"இல்ல. படு. Let me take care"

இந்த "Let me take care" ஐ இவன் எத்தனை முறை சொல்லியிருப்பான் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கும் ஜோதிக்கு.

Goldman Sachs இன்டெர்ன்ஷிப் செய்யும்போதே அப்படித்தான். ஜோதிக்கு என்று இல்லை. டீமில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆளாகத் தீர்த்து வைப்பான். அந்த ஒல்லி தேகத்தில் மூளை மட்டும் முக்கால் உடம்புக்கு இருக்குமோ என்னவோ.  கொல்கத்தாக்காரப்  பெண்ணொருத்தி இவர்களுடன் இன்டெர்ன்ஷிப் செய்து கொண்டிருந்தாள். ஒரு நாள் அவள் அப்பா இறந்து விட்டதாகத் தகவல் வந்தது. அவளுக்கு உடம்பு வேறு சரியில்லை.மயங்கிச் சாய்ந்து விட்டாள். அவளைத் தனியாக அனுப்பி வைக்க எல்லோருக்கும் பயம். ஒரு நிமிடம் கூட இவன் யோசிக்கவே இல்லை. பெங்களூரிலிருந்து கூடவே சென்று அவளுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்துவிட்டுத்தான்  திரும்பி வந்தான். 

ஹுமாயரா பிறக்கும்போது சரியான நேரத்தில் அவர்கள் பெற்றோர்களுக்கு  விசா கிடைக்கவில்லை.  யாரும் வர முடியாத சூழ்நிலை. அலட்டிக் கொள்ளவே இல்லை. இரண்டு மாதங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக் கொண்டு  தனியாகவே சமாளித்தான். குழந்தையைக் குளிக்க வைப்பது, ஜோதியைக் குளிக்க வைப்பது, சமையல், வீடு சுத்தம் செய்தல் என  அத்தனையும் அவனே செய்தான்.

நேற்று கூட  கால் முடித்து விட்டுத்  தூங்க வெகுநேரமாகியிருந்தது. பசி வேறு. தண்ணீர் குடித்து விட்டுப் படுக்கச் சென்றவளிடம்  சிக்கன் ஸ்டஃப் செய்யப்பட்ட சாண்ட்விட்ச் ஒன்றை எடுத்துக் கொடுத்துச் சாப்பிட்டு விட்டுப் படுக்கச் சொன்னான்

வீடு எப்போதும் வீடாக இருப்பதில் ஜோதியின் பங்கு  எவ்வளவோ அதே அளவுக்கு, சமயங்களில் அதைவிடக் கூடுதலாகவே தீனதயாளனின் பங்களிப்பு இருக்கும். எந்த மாதிரியான சூழலிலும் எப்போதும் புன்முறுவலுடன் அவன் சொல்லும் வார்த்தை  "Let me take care".

==================================

அது ஒரு கோடை விடுமுறை. ஜோதி எட்டாம் வகுப்பு முடித்திருந்தாள்.

"அம்மா வயிறு வலிக்குது".

"இங்க வாடி, பாத்ரூம் போ"."....அய்யயோ.. குத்த வெச்சுட்டியேடி. இந்த மனுஷன் உனக்குன்னு ஒரு குண்டுமணி நகை கூட சேக்கல ... இவர வெச்சுகிட்டு ஒத்தப் புள்ள உன்ன  எப்படிக் கரை  சேக்கப் போறேனோ"

திடீரென்று வீட்டுக்குள் அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்தார் ஜோதியின் அப்பா. எதிர்பார்த்தது தான் என்றாலும் ஒரு நிமிடம் சின்ன கலக்கம். எதனையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவராய்

"ஏய் இருடி. கண்ணு இங்க வாடா. வலிக்குதாம்மா? கொஞ்சம் பொறுத்துக்கோ. எல்லாம் சரி  ஆகிடும் " எந்தச் சூழ்நிலையிலும் நிதானமாக இருக்கும் அப்பாவைப் பார்க்கும் போதெல்லாம் ஜோதிக்குப் பெருமையாக இருக்கும்.

"ஏங்க, நீங்க அவ பக்கத்துல வராதீங்க. அவளைத் தனி இடத்துல  வெக்கணும்"

"அம்மா. அப்பா  என் கூடவே இருக்கட்டும்மா. எனக்கு பயமா இருக்கு."

"இல்லடி.அது ..வந்து."

"ஜோதி,  அப்பா  உன் கூடவே இருக்கேன்மா. எங்கயும் போகல."

"என்னமோ, பண்ணித் தொலைங்க. சொந்தக்காரங்க வீட்டுக்கு வரும்போது மட்டும் வெளில  போய்டுங்க"

.

==================

"ஜோதி, மருதாணி அரைச்சுட்டு வந்துருக்கேன். வா வெச்சு விடறேன் "

"இல்ல சரண்யா. Monday biology exam  இருக்கு. எனக்கு டைம்  இல்லை"

"ஏய், ரொம்பப் பண்ணாதடி"

"இதுல நான் என்னடி ரொம்பப் பண்றேன். எனக்கு exam  இருக்கு. நான் படிச்சுதான் ஆகணும்."

"எனக்கும் தான் exam இருக்கு".

"அப்போ  படிக்கலயா"

"படிச்சுக்கலாம் எங்க போயிடுது"

"ஏய். வர வர நீ சரி இல்லைடி. டென்த் வரைக்கும் ரெண்டு  பேருக்கும் 5-10 மார்க்குதான் வித்தியாசம் இருக்கும். இப்போ 50-60 மார்க் வித்தியாசம் வருது. ஏன்  ஸ்கூல்ல நல்லா சொல்லித்தர்றததில்லையா?என்ன ஆச்சு  உனக்கு"

"எனக்கெல்லாம் ஒன்னும் ஆகல. உனக்குதான் பேய் புடிச்சிருக்கு. இப்படியே படிச்சுப்படிச்சு ஒருநாள் பைத்தியமா சுத்தப்போற"

"ஆமாடி நீ ரொம்பத்  தெளிவா இருக்கிற பாரு"

பல வருடங்களாக இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள் இருவரும். அதனால் இருவர் வீடுகளுக்குமே  இது புதிதல்ல. ஜோதியின் அம்மாவுக்கு சரண்யா இன்னொரு மகள் போல. ஜோதியிடம் கூட சொல்லமுடியாதவற்றை சரண்யாவிடம் சொல்லிப் புலம்புவாள்.

"விடுங்கடி எப்போப் பாரு சண்டை போட்டுக்கிட்டு". "சரண்யா. பூரி சுட்டு வெச்சுருக்கறேன். போட்டு சாப்பிடு"

"சரிங்க அத்தை. பூரி சூடா இருக்கும்போதே சொல்லி விட்ருக்கலாம்ல. இப்போப் பாருங்க ஆறிப் போச்சு"

"அடுத்த தடவை சொல்லி விடறேன் தாயி. சாப்புடு. ஆமா சரண்யா.நம்ம ஜோதி என்னடி வர வர ஊர்ல யாருமே படிக்காத மாதிரி ரொம்பப் படிக்கிறா. யாரோ வாத்தியார், ரெட்டை ஜடை போடறதுக்கு, பின்னல் போடறதுக்கு எவ்ளோ நேரம் ஆகுது. அந்த நேரத்துல படிக்கலாம்ல-ன்னு சொல்லி இருக்காரு. இப்படியெல்லாமா சொல்லுவாங்க. இவளும் வந்துட்டு முடியெல்லாம் வளத்தி என்னால மெயின்டெயின் பண்ண முடியாது. அந்த நேரத்துல நான் படிக்கணும் னு சொல்லிட்டு  முடி வெட்டிக்கிறேன்னு வந்து நிக்கிறா.  இவ அப்பா வேற இவளுக்கு சப்போர்ட். நான்தான் முடியாதுன்னு தடுத்திட்டேன்.

"இதுக்குத்தான் அத்தை, அந்த ஸ்கூல்ல சேக்காதிங்கன்னு சொன்னேன்.அங்க படிக்கறவங்கல்லாம் ஒரு மாதிரி ஆயிடறாங்கன்னு சொல்றாங்க "

"என்னமோ சரண்யா. சேத்துட்டோம் இப்போ பாதியில மாத்தவா  முடியும். நல்லபடியா இவ படிச்சு வந்துட்டா பத்ரகாளிக்கு பொங்க  வெக்கறதா வேண்டியிருக்கேன்".

"அதெல்லாம் வந்துருவா அத்தை. கொஞ்சம் படிப்பாளி இல்லையா அப்படித்தான் இருப்பா "

"ஹ்ம்ம்.. இது என்னடி, லட்சணமா நடுவாக்கு எடுக்காம இப்படி சைடுவாக்கு எடுத்திருக்க"

"போங்க அத்தை. இப்போல்லாம் பிள்ளைங்க இப்படித்தான் போடுதுங்க. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்டைல் ல பின்னிக்கிறேன். அப்புறம் டிரஸ் கலர்க்கு  மேட்சிங்கா டிசைன் பூ வெச்சுக்குறேன், இதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு"

==================

 +2வில் ஜோதி 1160  மார்க். Medical Cut-off 293.5. மயிரிழையில் Medicine கிடைக்காமல் போய்விட்டது.

இன்னொரு வருஷம் திரும்ப எழுதுமாறு அப்பா கேட்டும் மறுத்து விட்டாள். அது இன்னொருவருடைய வாய்ப்பைப் பறிக்கும் என்று விளக்கம் கூறினாள். தனக்கு நல்ல Engineering  Cut off இருப்பதால் நல்ல காலேஜ் கிடைக்கும் என்று சமாதானம் சொன்னாள்.

"ஜோதி. இது உன்னோட முடிவும்மா, அப்புறம் அப்பா உனக்கு சரியான வழி காட்டலன்னு என் மேல வருத்தப் படக்கூடாது"

"இல்லைப்பா. Doctorக்கேதான் படிக்கணுமா. வேற எதுவும் படிக்கக்கூடாதா? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைப்பா. உங்களை என்னைக்கும் நான் எந்தக் குறையும் சொல்ல மாட்டேன்பா. என் அப்பா மாதிரி வருமா.." இரண்டு கன்னங்களையும் பிடித்து இழுத்து இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டினாள்.

 B.Tech Computer Science in PSG Tech. கல்லூரியில் சேர்ந்த நாள். அம்மா அப்பா இருவருமே கல்லூரிக்கு  வந்திருந்தனர்.தமிழ் நாட்டின் மிகச் சிறந்த பொறியியல் கல்லூரியில் தன் மகள் படிக்கிறாள் என்ற பெருமிதம் அவருக்கு. அவரது கையைப் பிடித்துக் கொண்டே கல்லூரி முழுவதையும் சுற்றி வந்தாள் ஜோதி.

வீட்டிற்கு வந்ததும் அம்மா அப்பா இருவருக்குமே மனம் கனத்துப்போய் இருந்தது.

"ஏங்க. அவ்வளவு பெரிய காலேஜ் ல நம்ம பிள்ளை படிச்சுடுவாளா"

"அவ யாருன்னு நெனச்ச. சரஸ்வதிடி. கண்டிப்பா நல்லா வருவா பாரு"

படித்து முடிக்கும்போது Goldman Sachsல் வேலை கிடைத்திருந்தது. வருடம் 12 லட்ச ருபாய் சம்பளம்.

Final  semester படிக்கும்போதே ஆறு மாதங்கள் இன்டெர்ன்ஷிப். பிறகு பெங்களூரில் வேலை. இவள் இன்டெர்ன்ஷிப்பில் இருந்தபோதுதான் சரண்யா, அசாரைத் திருமணம் செய்து கொண்டாள். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கச் சொன்னாள், ஜோதி. சரண்யா கேட்பதாக இல்லை. அதன் பிறகு ஜோதியின் அப்பாவின் நடவடிக்கைகள் கொஞ்சம் மாறத் தொடங்கியிருந்தன.

========

"யோவ் அசார். சரண்யாவுக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகி எட்டாவது மாசத்துல உங்களுக்கு இர்ஃபான் பொறந்துட்டானாமே. உண்மையச் சொல்லு, சம்பவம் எப்போ நடந்துச்சு", பிரியாணிக்கு வெங்காயம்  வெட்டிக்கொண்டே கேட்டான் தீனதயாளன்

"யப்பா சாமி,  ஆளை விடுங்க. ஏம்மா ஜோதி எங்க இருந்தும்மா இவரைப் புடிச்ச. என்னால இவர் கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது"

"விடுங்கண்ணா அவன் அப்படித்தான்"

சரண்யாவும் அசாரும் தனிக்குடித்தனத்தில் தான் வசிக்கின்றனர். இரண்டு வீடுகளிலும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. வீட்டில் அல்ல ஊர் முழுவதும் அப்படித்தான். அதனால் அவர்கள் இருவரும் ஊரை விட்டே வந்துவிட்டனர். எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது சென்னையில் ஒரு சின்ன ரெஸ்டாரண்ட் நடத்துகின்றனர். இர்ஃபானுக்குப் பிறகு ஜீவன். பெயர்கள் கூட இப்படித்தான் வைக்க வேண்டும் என்று யோசிக்க வைக்கவில்லை. அதுவாக அமைந்த பெயர்கள்.

வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே ஜோதி வெளிநாடு சென்றுவிட்டாள். ஆனாலும் சரண்யாவுடன் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருப்பாள். ஜோதியின் கல்யாணம் கூட அவசரகதியில் நிகழ்ந்ததால் சரண்யாவால் வர இயலவில்லை. தீனதயாளனும் அவ்வப்போது சரண்யா மற்றும் அசாருடன் போனில் பேசுவான். இப்போதுதான் முதல் முறையாக இரு குடும்பங்களும் நேரில் சந்திக்கின்றன.

முதல் முறை பார்க்கும்போதே அசாருடன் அவ்வளவு அன்பாகப் பழகிவிட்டான் தீனதயாளன். அசாரும் அப்படித்தான். என்னமோ ரெண்டு பெரும் நெடுநாள் பழகிய நண்பர்கள் போல, பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் பிரியாணி சமைத்துக் கொண்டிருந்தனர்.

"என்னென்னமோ ஆகிப் போச்சு ஜோதி. உன்னைத் தவிர யாரும் எங்ககிட்ட பேசறதில்ல.உன் புருஷன் எங்களோட இவ்வளவு நல்லாப் பழகுவார்ன்னு  நாங்க நெனச்சு கூடப் பார்க்கல. நாங்க உங்களுக்கு என்ன செய்யப் போறோம்னு தெரியல".

"எதுவும் செய்ய வேணாம், வரும்போது பிரியாணி செஞ்சுப் போட்டா போதும்", கிச்சனில் இருந்து தீனதயாளன்.

"சும்மா இரு டிடி. எதுக்கு சரண்யா இப்படி பொலம்பிகிட்டு இருக்க, எல்லாம் ஒருநாள் சரி ஆகும்"

"இல்ல ஜோதி, எனக்கு அந்த நம்பிக்கை இல்ல. ஊர்ல எல்லாரும் நான் பண்ணத பெரிய தப்புன்னு சொல்றாங்க.இருக்கலாம். ஆனா என் கல்யாணம் தப்புன்னு நினைக்கிற அளவுக்கு அசார் ஒருநாளும் நடந்துக்கிட்டதில்ல. எனக்கு ஒன்னுன்னா துடிச்சுப் போயிடுவார். அவங்க மத சம்பரதாயத்த கூட ஒரு நாளும் என் மேல திணிச்சதில்ல. அத்தை மாமாவை ஒருநாள் பஸ் ஸ்டாண்ட்ல பாத்தேன். பாத்தும் பாக்காதது மாதிரி போய்ட்டாங்க. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா"

"கேர்ள். இன்னிக்கு உன் கூட சந்தோசமா இருக்கத்தான் வந்திருக்கேன். இன்னொரு நாள் செண்டிமெண்ட் சீன் வெச்சுக்கலாம். ஆமா.. அசார் அண்ணன் உன் பின்னாடியே சுத்துறாரே, நீ  என்ன பண்ண?"

"ச்சீ ..லூசு.. என்னடி பேசுற.."

"ஆமா .. ஒன்னும் தெரியாத பாப்பா.. இங்க வா கேர்ள். யார் என்ன வேணா சொல்லட்டும். நீதான்டி என் மருதாணி". கட்டியணைத்து முத்தம் பதித்தாள் ஜோதி.

கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, "அப்படியா.அப்படின்னா.. நீதான் என் ஹுமாயரா"

"ஹுமாயராவா.. அப்படின்னா?"

"கன்னம் சிவப்பா இருக்கிற பொண்ணுதான் ஹுமாயராவாம். அசார் சொல்லுவாரு. அது மட்டும் இல்ல. அவ ரொம்பப் படிச்ச, புத்திசாலிப் பொண்ணாம். அவ பேசுற வார்த்தை ஒவ்வொன்னும் கத்தி மாதிரி இருக்குமாம் .எங்களுக்குப் பொண்ணு பொறந்தா ஹுமாயரான்னு தான் பேர் வெக்கலாம்னு இருந்தோம்.” ஒரு நிமிடம் மௌனமாக  யோசித்து விட்டுச் சொன்னாள். “எனக்கு ஒரு பொண்ணு இருந்தா அவளை உன்னை மாதிரிதான்டி வளர்ப்பேன்".

 ============================

புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பெங்களூரு விமான நிலையம் மிகவும் அழகாகவும் நவீனமாகவும் இருந்தது. இவர்களை அழைத்துச் செல்வதற்காக ஜோதியின் அம்மாவும் அப்பாவும் வந்திருந்தனர்.

நுழைவாயிலைத் தாண்டியதுதான் தாமதம். "அப்பா…”. என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஜோதி.

ஹுமாயராவை வாங்கி உச்சி முகர்ந்து முத்தமிட ஆரம்பித்தாள்  ஜோதியின் அம்மா. 

"என்னப்பா கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கீங்க. உடம்பு ஏதாச்சும் சரி இல்லையா?"

"நான் நல்லாத்தான் இருக்கேன்மா. நமக்கு ஜிம்பாடி. வேணும்னா உன் புருஷனோட குஸ்தி வெச்சுக்கலாமா? வர்றாரான்னு கேட்டுச் சொல்லு "

"மாமனார். ஏற்கனவே உங்க பொண்ணு ஊமைக்குத்தா குத்திக்கிட்டு இருக்கா. இதுல நீங்க  வேறயா?"

"ஏம்மா. ஊமைக்குத்தாவா குத்துற. நல்லா சத்தமா குத்தலாம்ல"

"ஒன்னு கூடிட்டிங்களா. என்னால முடியாது. நான் பேசாம காசி ராமேஸ்வரம்னு எங்கேயாச்சும் போறேன்"

"மாப்பிள. போறதும் போறீங்க. ரெண்டு டிக்கெட்டா போடுங்க. வர வர உங்க அத்தை இம்சை தாங்கல. நானும் உங்க கூடவே வந்துடறேன்"

"ஏங்க. புள்ளைங்க இப்போதான் வந்திருக்காங்க. நீங்க சந்தோஷத்துல தலைகால் புரியாம என்ன வேணா பேசுவீங்களா. சும்மா இருங்க".  

"சரிம்மா, ஜோதி. கெளம்பலாமா".

"ம். போலாம்ப்பா". அப்பாவின் கையைத் தன் இரு கைகள் கொண்டும் கோர்த்துக் கொண்டே கார் பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஜோதி.

======

"பொன்னுச்சாமி கல்வி அறக்கட்டளை மற்றும் நூலகம்"

ஜோதியின் அப்பா பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி அறக்கட்டளை. வருடா வருடம் பள்ளிப் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெரும் ஏழை மாணவியருக்கு கல்வி உதவி செய்வதற்காக, ஜோதி ஆரம்பித்தது. முதலில் சாதாரணமாக இரண்டு மூன்று பேருக்கு உதவி செய்யத் தொடங்கி இன்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உதவி பெறுகின்றனர். 


தன் தந்தையின் பெயரில் நடக்கும் அறக்கட்டளை என்பதால் பிறரிடம் உதவி பெறுவதைக் கூட மறுத்து விட்டாள் ஜோதி. ஒவ்வொரு வருடமும் உதவி பெறும் மாணவிகளை அழைத்தது அவர்களுடன் ஒரு நாள் செலவிடுவது வழக்கம். அவளுடைய வருட விடுமுறையை அதற்கேற்றவாறே திட்டமிடுவாள். இந்த முறை அலுவலகத்தில் மேஜர் ரிலீஸ் ஒன்று இருந்தது. இருப்பினும் இதைத் தவிர்க்கவே கூடாது என்பதற்காக இரண்டு வாரங்கள் தூக்கமில்லாமல் வேலை செய்து, திட்டமிட்டபடி வந்து சேர்ந்துவிட்டாள். 

 

வெளியூரிலிருந்து வரும் மாணவியருக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் தங்குமிடம் உணவு இன்னபிற வசதிகளை உள்ளூர் தன்னார்வலர்கள் பார்த்துக் கொள்கின்றனர். அறக்கட்டளை நிர்வாகத்தை ஜோதியின் அப்பாவே கவனித்துக் கொள்கிறார். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பரிசீலித்து, யாருக்கு நிச்சயம் உதவி தேவைப்படும் என்று  ஆலோசித்து, அவர்களுக்கு என்ன,எவ்வளவு  உதவி செய்யலாம் என்பதை அவரே ஜோதிக்குப் பரிந்துரைக்கிறார். 


அந்த மாணவிகளுடன் பேசுவதில் அப்படியே லயித்துப் போய்விடுவாள் ஜோதி. அவளுக்காகவும், ஹுமாயராவுக்காகவும் சிலர் சின்ன சின்ன அன்புப்பரிசுகளைத் தருவதுண்டு. அவற்றைக் கூட முடிந்தவரைத் தவிர்க்கச் சொல்லுவாள். வாஞ்சையுடன் சில பெற்றோர்கள் அவளுக்காக சில பதார்த்தங்களைச் செய்து எடுத்து வருவதுண்டு. மிகவும் ரசித்து ரசித்து அவற்றைச் சாப்பிடுவாள். மாணவிகள் ஒவ்வொருவருடைய பெயரையும் மறக்காமல் நினைவில் வைத்திருப்பாள். 


தனித்தனியாகவும், குழுக்களாகவும், சில சமயம் மொத்தமாகவும் அவர்களுடன் உரையாடுவாள்.எல்லோரிடமும், எப்போதும் அவள் சொல்வது ஒன்று மட்டும்தான், "உயரப் பறக்க வேண்டும் என்பதை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது எவ்வளவு உயரம் என்பதைக் காலமும் உங்கள் உழைப்பும் தீர்மானிக்கட்டும்." 

==========

 

ஜோதி இன்டெர்ன்ஷிப் முடித்துவிட்டு வேலைக்குச் செல்வதற்கு இன்னும் ஒன்னரை மாதங்கள் இருந்தது.

அவளுக்குத் தேவையான உடைகள் மற்றும் இன்னபிற அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக அப்பாவை அழைத்துக் கொண்டே இருந்தாள். அப்பா அதில் சரியாக ஆர்வம் காட்டாமல் பிடி கொடுக்காமலே இருந்தார்.

 சரண்யா திருமணம் செய்து கொண்டதில் அப்பாவுக்கு வருத்தம் என்று தெரியும், ஆனால் அதற்காகத் தன்னிடம் என்ன கோபம் என்று சரியாகப் புரியவில்லை. குழப்பமாக இருந்தது.

 சரி, கேட்டே விடலாம் என்று முடிவு செய்தாள். "அப்பா, வேலைல ஜாய்ன் பண்றதுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை,  நெறய ஷாப்பிங்  செய்ய வேண்டியது இருக்கு. நீங்க கண்டுக்காம இருக்கீங்க. என்னப்பா ஆச்சு?"

 "அது.. அது வந்தும்மா.. நீ.. வேலைக்குப் போக வேண்டாம்"

 "எ... என்னப்பா சொல்றீங்க?"

 "நல்லா யோசிச்சுத்தான் சொல்றேன்மா. உன்னை வேலைக்கு அனுப்பிட்டு என்னால இங்க வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாது"

 ஜோதிக்கு இப்போது புரிந்து விட்டது. ஆனால் தன் அப்பாதான் இதைச் சொல்கிறார் என்றுதான்  நம்ப முடியவில்லை.

 "சரண்யா விஷயத்துல ஊரே சந்தி  சிரிக்குது. என்கிட்டயே வந்து நேருக்கு நேரா அசிங்கமாப் பேசுறாங்க. நீயும் அப்படி ஏதாச்சும் பண்ணிட்டீன்னா என்னால தாங்கிக்கவே முடியாது " 

 "அப்பா.. நான்…. அப்படிலாம்… " (தீனதயாளன் ஒரு கணம் நினைவில்  வந்து போனான்).

“உன்னைச் சொல்லி குத்தமில்லமா.  உன் வயசு அப்படி. நீ வேலைக்குப் போகல அவ்வளவுதான். வேற எதுவும் பேசாத..."

 "வேலைக்குப் போகாம நான் என்னப்பா பண்ணப் போறேன் "

"நீ ஒன்னும் பண்ண வேணாம்மா... வீட்டோட இரு. உன் ஜாதகத்தை வெளில குடுத்துருக்கேன். தை மாசத்துல கல்யாணத்தை முடிச்சி, உன்னை ஒருத்தன் கையில புடிச்சு குடுத்துட்டா அப்புறம் நாங்க நிம்மதியா இருப்போம்"

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது ஜோதிக்கு. இயலாமையும் ஆற்றாமையும் சேர்ந்து கொண்டு, ஆத்திரமும் கோபமும் பீறிட்டுக் கொண்டு வந்தது.

"அப்பா. இப்போதைக்கு நான் வேலைக்குப் போகணும்னு கனவுல இருக்கேன்பா. அதுல மண்ணை அள்ளிப் போடாதீங்க . கல்யாணம் பண்ணிக்குற மனநிலையும் எனக்கு இப்போ இல்லை. தயவு செஞ்சு நான் சொல்றதைக் கேளுங்கப்பா "

அப்பா. கேட்கிற மாதிரித் தெரியவில்லை. அம்மா கூடத் தன்னிடம் அப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறார்  என்று சொல்லவேயில்லை என்ற ஆதங்கம் வேறு.

அம்மா சொல்லி விட்டாள் , "ஜோதி, எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கும்மா. அது உங்கப்பா சொல்லி ஏற்பட்ட நம்பிக்கைதான். நீ சரஸ்வதி, நீ எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்னு அவரே சொல்லிட்டு, இப்போ அவரே இப்படி நடந்துக்குறார். ஊர்க்காரங்க பேசறதக் கேட்டுகிட்டு இப்படியெல்லாம் பண்றாரு. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியிலம்மா. அவரை மீறி என்னால எதுவும் பண்ண முடியாது. அவரு நாலு எடத்துக்குப் போறவரு வர்றவரு. முடிஞ்சவரைக்கும் அவரு சொல்றதைக் கேட்டு நடந்துக்க முயற்சி பண்ணும்மா. உனக்கு இந்த விஷயத்துல வேற எந்த உதவியும் என்னால செய்ய முடியல. என்னை மன்னிச்சுடுமா."

 

இரண்டு மூன்று நாட்கள் பிரம்மைப் பிடித்தவள் போல் இருந்தாள். ஜோதியின் அப்பாவிற்குக் கூட அவளைப்  பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், தன் மகளின் நல்ல எதிர்காலத்திற்காகத்தான்  தான் இதைச் செய்வதாக உறுதியாக நம்பினார்.

 

தன் வீட்டில் இந்த மாதிரியெல்லாம் நிகழக்கூடும் என்று ஜோதி ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. எமோஷனலாக யோசிக்க வேண்டாம், நிதானமாக யோசிக்க வேண்டும் எனத் தனக்குத் தானே கூறிக் கொண்டாள் . இனிமேல் என்ன நடக்கக்கூடும் என்று யோசிக்க தொடங்கினாள். தன்னுடைய பலம் உணர்ந்தவளாய், தான் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்று கணித்தவளாய்த் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தாள் , அதை அப்பாவிற்கு சொல்ல ஆயத்தமானாள்.

மறுநாள் காலை. அப்பா நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தார்,

 "அப்பா.. நான் வேலைக்குப் போகத்தான் போறேன். இந்தக் கல்யாணம் பண்ற வேலையெல்லாம் விட்டுட்டு பெங்களூர் போறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க"

 "நான் அவ்வளவு தூரம் சொல்லிட்டேன். உனக்குப் புரியல? என் முடிவை நான் மாத்திக்கிறதா இல்ல."

 "நானும் என் முடிவை மாத்திக்கிறதா  இல்லைப்பா. உங்களுக்கு 52 வயசாகுது. எனக்கு 21 தான். எனக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கு. கனவுகள் இருக்கு. உங்களுக்காக, என்னோட எதிர்காலத்துல எந்தப் பங்கும் எடுத்துக்காத இந்த ஊர்க்காரங்களுக்காக என்னோட வாழ்க்கையைப் பணயம் வெக்க முடியாது. நீங்க கட்டி வெக்குற யாரோ ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுக்க இந்த ஊருக்குள்ள, நாலு சுவத்துக்குள்ள என்னால வாழ முடியாது"

 "ஓஹோ. அவ்வளவு ஆகிப் போச்சா. அப்பனுக்கு வயசாகிடுச்சு. இனிமே அவன் நமக்குத் தேவையில்லைன்னு முடிவு பண்ணிட்டீங்களோ?"

 "அப்படி இல்லைப்பா. நீங்கதான் என் உயிரு. அதுக்காக நீங்க என்ன சொன்னாலும் என்னால கேட்க முடியாது"

 தீர்க்கமாகப் பேசும் மகளைப் பார்த்து ஒரு நிமிடம் ஸ்தம்பித்துத் தான் போனார் அப்பா. இருந்தாலும் அவரது ஈகோவை விட்டுக் கொடுக்க முடியவில்லை.

 "உனக்கு அவ்வளவு திமிர் இருந்தா, எனக்கு எவ்வளவு இருக்கும். போம்மா . நீ போ . எனக்கு என்  மானம் மரியாதை தான் முக்கியம். ஊருக்குள்ள நாலு பேர் முன்னாடி தலை நிமிந்து நான் நடக்கணும். நான் சொல்றதைக் கேக்காம என்னைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போனீன்னா..  நான் தூக்குப் போட்டுத்தான் செத்துப் போகணும்"

 இதை ஜோதி எதிர்பார்த்துதான் இருந்தாள் . கடைசியில் இது இங்குதான் வந்து நிற்கும் என்பது அவளுக்குத் தெரிந்துதான்  இருந்தது. இதற்கான பதிலும் அவளிடம் தயாராகவே இருந்தது. அவர் கண்களைப் பார்த்து நேராகச் சொன்னாள்.

 "செத்துப் போங்கப்பா"

 ஒரு நொடி, வானமே இடிந்து தன் தலைமேல் விழுந்தது மாதிரி இருந்தது அவள் அப்பாவுக்கு. அப்படியே சரிந்து தரையில் உட்கார்ந்தார்.

 அவளே தொடர்ந்தாள் , "அப்படிச் சொன்னதுக்கு என்னை மன்னிச்சுடுங்கப்பா. நீங்க என்ன செய்யறேன்னு தெரியாம செஞ்சிட்டு இருக்கீங்க. நீங்க  என்னோட எதிர்காலத்தை மட்டும் பாழாக்கால . என்னை மாதிரி இருக்குற ஆயிரக்கணக்கான பொண்ணுங்களோட வாழ்க்கையை வீணாக்கப் பார்க்குறீங்க. உங்களை மாதிரி எல்லோரும் பண்ண ஆரம்பிச்சா இங்க பொண்ணுங்க அடுத்த கட்டத்துக்குப் போகமாலே முடங்கிடுவாங்க. அதுக்கு நானே உடந்தையா இருக்க முடியாது.

 பொண்ணுங்க சுதந்திரமா இருக்கணும். அவங்க அடையாளத்தை அவங்களே தேடிக்கணும், என்னோட அடையாளத்தைத்  தேடித்தான் நான் போறேன். நீங்க நல்ல முடிவு எடுத்தா நாம, நம்ம குடும்பம் சந்தோஷமா இருக்கலாம். ஒரு வேளைத் தப்பா ஏதாவது யோசிச்சு என்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணாலும்.. சாரிப்பா.. என் முடிவை எக்காரணம் கொண்டும் மாத்திக்கப் போறதில்லை"

 ஃபோனை எடுத்து, பெங்களூருவுக்கு டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்தாள் ஜோதி.

 

1 comment

Leave a Reply